நெஞ்சில் ஜில் ஜில் - டீசர்

Thulasi Raj

Moderator
Staff member

டீசர் 1



அலைப்பேசியில் பேசிக் கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தார் தயானந்த். கதவருகே இருந்த திரையில் தனது கைரேகையை வைக்க, தவறு என காட்டி அவரை அலுவலகத்தினுள் நுழைய விடாமல் தடுத்து ஒலி எழுப்பியது தானியங்கி எந்திரம்.

“ஒன் செகண்ட்..” என்று அழைப்பைத் துண்டித்தவர் மீண்டும் கைரேகையைச் சரியாக வைக்க, மறுபடியும் அதே பதில்.

“வாட் த ஹெல்..” என்று கோபத்தில் பல்லைக் கடித்தவர் “மேனேஜர்.. மேனேஜர்..” என்று கத்தி அழைக்க,

உள்ளிருந்து ஓடி வந்தவர் “என்ன ஸார்” என்று பவ்வியமாக கேட்டார்.

“மெஷின்ல ஏதாவது ப்ரோப்லேம்ன்னா முன்னாடியே பார்த்து வைக்க மாட்டியா?” என்று அவர் எகிற

“இல்லையே ஸார்.. மெஷின் நல்லா தானே ஒர்க் பண்ணிட்டு இருக்கு” என்றார்.

“அப்புறம் ஏன்ய்யா எனக்கு எரர் காட்டுது..”

“கர்ணன் ஸார் தான் உங்களை இனிமே கம்பெனிக்குள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்” என்று கூற, அதைக் கேட்டு அதிர்ந்தவர் ஏன்னென்று காரணம் தெரியாமல் குழம்பிப் போனார்.

அதே நேரம் வீட்டில் தனக்கே உரிய ஆள் உயர பிரம்மாண்டாமான இருக்கையில் அமர்ந்து ஆப்பிள் பழத்தைக் கத்தியால் வெட்டி சாப்பிட்டு கொண்டு இருந்த கர்ணன் “ஒன்..” என்று எண்ணத் தொடங்கினான்.

சிறிது இடைவெளி விட்டு அவன் “டூ..” என்ற போது அவனது அம்மாவிற்கு க்ரிடிட் கார்ட் சேவை முடக்கப்பட்டதாக அவரது அலைப்பேசிக்கு தகவல் வந்தது.

“த்ரீ..” என்ற போது அவன் தங்கை மற்றும் தங்கை கணவரின் தலையில் பேரிடியை இறக்கி இருந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடம், நால்வரும் கடும் கோபத்துடன் அவன் முன்னே வந்து நின்றார்கள்.

“கர்ணா.. என்னடா பண்ணி வச்சி இருக்க?” என்று தயானந்த் பல்லைக் கடிக்க,

“ம்.. நல்லா கேளுங்க.. என் கார்ட்ஸ் எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டான்” என்று புகார் வாசித்தார் கலா.

“அம்மா உங்களோடதுமா? என் கார்ட் கூட பிளாக் பண்ணி இருக்கார் அண்ணா” என்று அர்ச்சனா சொல்ல,

“உன்னோடதுமாடி” என்று சோகமாகக் கேட்டார்.

“அத்தை.. உங்களை எல்லாம் விட என் நிலைமை தான் மோசம்.. உங்க மகன் 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு என் மேல கோர்ட்ல கேஸ் பைல் பண்ணி இருக்கார்..” என்று சொல்ல.. எல்லாருமே அதிர்ச்சியில் வாயைப் பிளந்தார்கள்.

“கர்ணா.. என்னடா இதெல்லாம்?” என்று தயானந்த் அடிக்குரலில் சீற,

தந்தையையும் மற்றவர்களையும் நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தவன் “நான் ஏன் இப்படி பண்ணேன்னு உங்களுக்கு எல்லாம் இன்னுமா புரியல?” என்று அவன் நக்கல் வழியும் சிரிப்புடன் கேட்க, நால்வருமே “இல்லை” என்பது போல தலை அசைத்தார்கள்.

அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தவன் “ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து நல்லா யோசிங்க..” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து மாடிப்படியில் ஏறினான்.

“ரியா..” என்று தயானந்த்தின் வாய் முணுமுணுக்க, அதில் நின்றவன் பாதி படியில் இருந்தபடியே அனைவரையும் திரும்பிப் பார்த்தான்.

“குட் டாட்.. சரியா கண்டுப்பிடிச்சிட்டீங்களே”

“இடியட்.. போயும் போயும் அவளுக்காகவா நீ இப்படி எல்லாம் பண்ற?” என்று அவர் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க

அவரை ஆழ்ந்து நோக்கியவன் “ஆமா.. ஐ வாண்ட் ஹெர்..” என்றான் அழுத்தமாக.

“அதுக்கு ஏன் எங்களை இப்படி படுத்துற?” என்று கலா கேட்க

அவரைப் பார்வையால் துளைத்து எடுத்து விட்ட கர்ணன், எதுவும் பேசாமல் படியில் ஏறி அவனது அறைக்கு சென்றான்.
 

டீசர் 2


கருப்பு நிற ஜக்குவார் கார் வந்து அந்த மாளிகை முன்பு நின்றது. வண்ண விளக்குகளால் அந்த மாளிகை மின்னி கொண்டு இருக்க, அதனைப் பார்த்துக் கொண்டே காரில் இருந்து இறங்கினான் கர்ணன்.
கையில் இருந்த சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட மலர் செண்டைப் பார்த்தவன் இதழ் வளைத்து சிரித்தான்.
"கர்ணன்.." என்று ஒரு குரல் கேட்க, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
"நீங்க இருக்குற பிஸியில வர மாட்டீங்கன்னு நினைச்சேன்.. எப்படியோ வந்துட்டீங்க.." என்று புன்னகை முகத்துடன் கர்ணனை வரவேற்றான் நிரஞ்சன்.
"நம்ம வீட்டு விசேஷமாச்சே நிரஞ்சன்.. வராமல் இருப்பேனா.." என்று கூற, அதன் உள்ளர்த்தத்தை உணராத நிரஞ்சன் விரிந்தப் புன்னகை உடன் அவனை வீட்டினுள் அழைத்து சென்றான்.
உள்ளே ஆட்டம் பாட்டம் என்று வளைக்காப்பு விழா கலை கட்டியது. நிரஞ்சனின் மனைவிக்கு தான் வளைக்காப்பு. இளஞ்சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் தாய்மை பூரிப்பில் பேரழகுடன் பிரம்மாண்ட நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் அருகே நின்று இருந்த 4 வயது தீரன் "அம்மா.." என்று அழைத்து அவள் மேல் ரோஜா இதழ்களைத் தூவி விட்டு புன்னகைத்தான்.
"தீ..ரன்.. சும்மா இருக்க மாட்டியா.. அப்பாக்கிட்ட போடா.." என்று அவள் சிரித்து கொண்டே விரட்ட, அவன் நிரஞ்சனிடம் ஓடினான்.
"அப்பா.. அப்பா.. அம்மா திட்டுறாங்க.." என்று தன் மழலைக் குரலில் தந்தையிடம் புகார் வாசிக்க, மகனைத் தூக்கி வைத்து கொண்ட நிரஞ்சன் தனக்கு இடது பக்கம் கை காட்டி "அங்க ஐஸ்கிரீம் தர்றாங்க.. போய் சாப்பிடு.." என்று மகனை திசை திருப்பினான். அவனும் ஐஸ்கிரீம் ஆசையில் தந்தையின் கையில் இருந்து நழுவி ஓடி விட்டான்.
"எங்க மூத்த பையன்.. தீரன்.." என்று நிரஞ்சன் கர்ணனிடம் கூற
"ஓ.. இரண்டாவது குழந்தைக்கு எல்லாம் கூடவா இப்போ வளைக்காப்பு பண்றாங்க.." என்று நக்கலாக கேட்டான்.
"இல்ல கர்ணன்.. இது அம்மாவோட ஆசைக்காக பண்றோம்.." என்ற நிரஞ்சன் கர்ணனை அழைத்துக் கொண்டு மேடை ஏறினான்.
அவளைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாக அடி எடுத்து வைத்து மேடை ஏறி வந்த கர்ணன் அவளிடம் பூ செண்டை நீட்ட, "தேங்க்ஸ்" என்றபடி அதனை புன்னகை உடன் வாங்கிக் கொண்டாள்.
"டேக் கேர்.. டேக் கேர் ஆப் அவர் சைல்ட்" என்று அவன் கூற, அவள் முகம் பேயறைந்தது போல் ஆனது.
நிரஞ்சன் சிரித்து கொண்டே "கர்ணன்.. நீங்க தப்பா விஷ் பண்றீங்க?" என்றான்.

பக்கவாட்டாகத் திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்தவன் "இந்த கர்ணன் எங்கேயும் எதையும் தப்பா செய்ய மாட்டான் மிஸ்டர் நிரஞ்சன். இவ வேணும்ன்னா உங்க மனைவியா இருக்கலாம். ஆனா இவ வயித்துல வளர்ற குழந்தை என்னோடது.." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கூற, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
 

டீசர் 3


மாதாந்திர பரிசோதனைக்காக மருத்துவரிடம் வந்தாள் நிரஞ்சனின் மனைவி. அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க, "என்னாச்சு.." என்று கேட்டாள் விதுரா. (நம்ம விஷ்ணு பொண்ணுங்க.. ஆகாஷ் பொண்டாட்டி)
"ஒன்னும் இல்ல டாக்டர்.." என்றவளை ஆழ்ந்து நோக்கிய விதுரா
"ஸ்கேன் பண்ணலாமா?" என்று கேட்டாள்.
அவள் சரி என்று தலை அசைக்க, அவளுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. எல்லாம் முடிந்து அவள் வெளியே வர, மருத்துவர் அறையில் கர்ணன் அமர்ந்து இருந்தான்.
அவனைக் கண்டு அவள் பயத்தில் உறைய, குழப்பத்துடன் அவனை நோக்கிய விதுரா "ஹெலோ.. யாருங்க நீங்க? பேஷண்ட்டை பார்த்துட்டு இருக்கும் போது இடையில் வந்து இருக்கீங்க? உங்களை யார் உள்ளே விட்டது?" என்று சத்தம் போட்டாள்.
"என் குழந்தையைப் பத்தி தெரிஞ்சுக்குற உரிமை எனக்கு இல்லையா?" என்று அமர்ந்தலாகப் பதில் சொன்னவனின் பார்வை விதுராவுக்கு அருகில் நின்று இருந்தவளின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.
விதுரா அதிர்ச்சியில் விழி விரித்து நிரஞ்சனின் மனைவியைப் பார்க்க, அவள் அந்த பார்வையில் கூசிப் போனாள்.
கண்களில் கண்ணீர் திரள அவனைப் பார்த்தவள் "ஏன் இப்படி நான் இருக்குற இடத்துக்கு எல்லாம் வந்து என் மானத்தை வாங்குறீங்க? ப்ளீஸ் போயிடுங்க.." என்று கெஞ்ச, கர்ணன் மனம் இறங்கி இருக்கையில் இருந்து எழுந்து சென்றான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவளின் வழியை மறித்தாற் போல் வந்து நின்ற கர்ணன் "குழந்தை எப்படி இருக்கு?" என்று அக்கறையாகக் கேட்டான்.
அவனை எதிர்பார்க்காதவள் பயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, "ஏன்டி என்னைப் பார்த்து பயப்படுற?" என்று உரிமையாகக் கேட்டான்.
அவள் திரும்பிச் செல்லப் பார்க்க, எட்டி அவளது கையைப் பற்றி நிறுத்தினான் கர்ணன்.
"ரியா.. டோன்ட் ஆக்ட் லைக் அ ஸ்மார்ட்.." என்று அவன் கர்ஜிக்கும் போது தான் அங்கு வந்து சேர்ந்தான் நிரஞ்சன்.
கர்ணன் தன் மனைவியிடம் அத்து மீறி நடப்பதைக் கொண்டு கோபமுற்றவன் "கர்ணன்.." என்று கத்தினான்.
நிதானமாகத் திரும்பிப் பார்த்த கர்ணன், அவளின் கையை விடவில்லை. வேகமாக வந்த நிரஞ்சன் கர்ணனின் கையை பிரித்து எடுத்து இருவருக்கும் இடையில் வந்து நின்றான்.
"கர்ணன்.. அன்னைக்கே சொல்லியாச்சு.. இவ உங்க ரியா இல்ல.. என்னோட மனைவி திவ்யா. எனக்கும் இவளுக்கும் 5 வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சு. 4 வயசுல எங்களுக்கு ஒரு பையன் இருக்கான். இப்போ இரண்டாவது குழந்தை கூட வரப் போகுது. இது எதையுமே புரிஞ்சிக்காம நீங்க மறுபடியும் மறுபடியும் வந்து தொல்லை கொடுத்துட்டு இருந்தீங்க, அப்புறம் நான் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்க வேண்டி வரும்.." என்றான் எச்சரிக்கும் குரலில்.
"ப்ச் இவன் வேற.." என்று சலிப்பாக நெற்றியை நீவியவன் "ரியா.. நான் உங்கிட்ட நம்ம குழந்தை எப்படி இருக்குன்னு தானே கேட்டேன். பதில் சொல்லுடி.." என்று அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்க, அவனின் நெஞ்சில் கை வைத்து நிறுத்தினான் நிரஞ்சன். திவ்யா பயத்துடன் நிரஞ்சனின் முதுகு பின்னால் தன்னை மறைத்து கொண்டாள்.
அவளின் பயம் அவனை உயிரோடு கொன்றது. அவன் அவளையே பரிதாபத்துடன் பார்க்க, "கர்ணன்.. சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா.. இவ உன்னோட ரியா இல்ல. என் வைஃப் திவ்யா. உன்னோட ரியா செத்துப் போய் 6 மாசமாச்சு" என்று கத்தினான் நிரஞ்சன்.
அதில் கர்ணன் ஸ்தம்பித்துப் போய் நிற்க, நிரஞ்சன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான். விழிகளில் கண்ணீர் துளிர்க்க, கர்ணன் திவ்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
நிரஞ்சனின் தோளில் தலை சாய்த்தப்படி சென்று கொண்டு இருந்தவள், சிறிது தூரம் சென்றப் பின்பு அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளின் மருண்ட விழிப் பார்வையைக் கண்ட கர்ணனின் இதழ்கள் "நீ என் மான்க்குட்டியே தான்டி.." என்று முணுமுணுத்தது.
 
Back
Top