ஆளுநர் மாளிகை விழா கோலம் கொண்டிருக்க, அரங்கத்தின் உள்ளே செய்தியாளர்கள் அணிவகுத்து நின்று இருந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெண்ணிற வேட்டிச் சட்டையில் தனித்தனி இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்.
மேடையின் ஓரத்தில் கருப்பு நிற உடை அணிந்த காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று இருக்க, நடுநாயகமாக அமர்ந்து இருந்தார் தமிழ் நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர்.
“அடுத்து, புவியரசன்..” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் மைக்கில் கூற,
அடர்ந்த கேசம் முன்நெற்றியில் அலைப் பாய, அழுத்தமானப் பார்வையுடன் மேடை ஏறி வந்த புவியரசன், முதலமைச்சரைப் பார்த்து மெலிதாக உதட்டை விரித்துப் புன்னகைத்து கையெடுத்து வணங்கினான். பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகைப் புரிந்தவர், அவனது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக லேசாக தலையை அசைத்தார்.
நேரே மைக் முன்னே சென்று நின்றவன், “புவியரசன் எனும் நான்.. சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டு இருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லா முழு முதல் ஆட்சியையும் உரிமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ் நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க, அச்சமும் ஒருதலைச் சார்பும் இன்றி விருப்பு வெறுப்பு விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என்றும் உளமாற உறுதி மொழிகிறேன்” என்று தனது கம்பீரக் குரலில் கூறி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மேடையில் இருந்து இறங்கினான்.
பின்னர், சில நடைமுறைகள் முடிந்து அவன் வீட்டிற்கு வர மாலை ஆனது. அவனது கார் தெருமுனையில் நுழையும் போதே வீட்டின் வாசலில் 1000 வாலா பட்டாசை பற்ற வைத்தான் சாகரன்.
பட்டாசு வெடிப்பதைக் கண்டு டிரைவர் காரை வாசலிலேயே நிறுத்தி விட, புவியரசன் கார் கதவைத் திறந்து கொண்டு மண் தரையில் இறங்கி நின்றான்.
“அடிங்கடா..” என்று ஆதவன் குரல் கொடுக்க, பேண்ட் வாத்தியங்கள் காதைக் கிழித்தன.
அடுத்து வசந்தன் புவியரசனுக்கு ஆளுயர மாலையைப் போட்டு விட்டு “வாழ்த்துகள் அண்ணா..” என்று கூறி புன்னகையுடன் அணைத்துக் கொண்டான்.
அவர்களைத் தொடர்ந்து கடைசியாக வந்த கடைக்குட்டிச் சிங்கமான ககன் அங்கே அதிர்ந்து கொண்டிருந்த பேண்ட் வாத்தியத்திற்கு இணையாக தெருவில் இறங்கி ஆட்டம் போட, புவியரசனின் பார்வை அவன் புறம் சென்றன.
அடுத்த நொடி தம்பியை நெருங்கி அவனது பின்னந்தலையில் தட்டிய ஆதவன், “அண்ணா இருக்கும் போது என்னடா ஆட்டம்?” என்று அதட்டி அவனை இழுத்துக் கொண்டு புவியரசனிடம் வந்தான்.
இதுதான் ஆதவன்.. புவியரசன் மனதில் நினைப்பதை அடுத்த நொடி செய்து முடித்து விடுவான்.
எப்போதும் போல இப்போதும் தம்பியின் செயலைக் கண்டு பெருமிதமாக உணர்ந்த புவியரசன், சிறு புன்னகையுடன் ஆதவனைத் தோளோடு சேர்ந்து அணைத்துக் கொண்டான்.
“புவி இங்க வாப்பா” ரங்கநாயகி கையில் ஆர்த்தி தட்டை வைத்துக் கொண்டு அழைக்க, தாயின் அழைப்பைக் கேட்டு அவரின் முன்பு சென்று நின்றான் புவியரசன்.
அவர் அவனுக்கு ஆர்த்தி சுற்றப் போக, “ஒரு நிமிஷம் இருங்கம்மா” என்று தடுத்த புவியரசன், தனது கழுத்தில் இருந்த மலர் மாலையைத் தன் அருகில் நின்று இருந்த தம்பிகளான சாகரன், ஆதவன், வசந்தன், ககன் ஆகிய நால்வருடனும் பகிர்ந்து கொண்டு, “இப்போ ஆர்த்தி எடுங்க” என்றான்.
“ஏம்பா புவியரசா.. அமைச்சராகி முதல் முறையா வீட்டுக்கு வர்றன்னு அண்ணி உனக்கு ஆர்த்தி எடுக்க வந்தா.. நீ என்னப்பா உன் தம்பிகளுக்கும் சேர்த்து ஆர்த்தி எடுக்கச் சொல்ற?” என்று அவனது அத்தை நீலவேணி கேட்டார்.
“என் வெற்றியில எப்போவும் என் தம்பிங்க இருப்பாங்க. இவங்க இல்லாம என் வாழ்க்கையில எதுவும் நடக்காது” என்று புவியரசன் கூற, அவனது தந்தையான சிவப்பிரகாசம் பெருமையோடு மீசையை முறுக்கினார்.
கணவனைப் பார்த்து நொடித்துக் கொண்ட ரங்கநாயகி, தனது 5 மகன்களுக்கும் சேர்த்து ஆர்த்தி சுற்றி விட்டு, “உள்ளே போங்கப்பா..” என்றார்.
அவர்கள் ஐவரும் ஒன்றாக படியேறி வீட்டினுள் நுழைய, தனது கையில் இருந்த ஆர்த்தி தட்டை வேலைக்காரியிடம் கொடுத்து வெளியே ஊற்றச் சொல்லி விட்டு தானும் வீட்டினுள் சென்றார் ரங்கநாயகி.
அங்கே ஹால் சோஃபாவில் அமர்ந்து இருந்த தாய்மாமனான சிங்காரவேலனைப் பார்த்துக் கொண்டே அழுத்தமான அடியெடுத்து வைத்து நடந்து வந்த புவியரசன், “அட! மாமாவும் இங்க தான் இருக்காரா?” என்று அலட்சியத் தோரணையில் கேட்டு விட்டு,
அவருக்கு அருகில் முகம் முழுவதும் பூரிப்புடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையின் உடன்பிறந்த அண்ணனான ஞானப்பிரகாசத்தின் காலில் விழுந்து, “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பெரியப்பா” என்றான்.
அவர் தான் அவனுக்கு அரசியல் குரு. இருபத்தெட்டு வயதில் ஒருவன் அரசியலில் நுழைந்து அமைச்சர் பதவியைப் பெறுவது என்பது அத்தனை சுலபம் அல்ல. அதனைச் சாத்தியமாக்கிய பெருமை ஞானப்பிரகாசத்தையே சாரும்.
“நல்லா இருப்பா..” என்று அவர் வாழ்த்த, புன்னகையுடன் எழுந்து கொண்டவன் சோஃபாவில் நடுநாயகமாகச் சென்று அமர்ந்தான்.
“அமைச்சர் ஆயிட்டன்னு தங்கச்சி ஃபோன் போட்டு சொன்னா. அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்து இருக்கேன்” என்று சிங்காரவேலன் பேச்சை ஆரம்பிக்க, புவியரசன் அதற்கு எதுவும் சொல்லாமல் மற்றவர்களுடன் பேசினான். அவர் புறம் திரும்பவே இல்லை.
அதில் அவமானமாக உணர்ந்த சிங்காரவேலன் பொங்கி வந்த ஆத்திரத்தைப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டு தங்கையைத் திரும்பிப் பார்க்க, ரங்கநாயகி தவிப்புடன் ஞானப்பிரகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
ஏனெனில் புவியரசன் இந்த உலகத்திலேயே அவர் ஒருவரது பேச்சை மட்டும் தான் தட்டாமல் கேட்பான்.
‘இரும்மா.. நான் பேசுறேன்..’ என்பது போல் கண்களை மூடி திறந்தவர், “புவி..” என்று அழைக்க,
“என்ன பெரியப்பா” என்று கேட்டான்.
“உன் தாய்மாமனும் அத்தையும் உன்னைப் பார்க்க தானே வந்து இருக்காங்க. நீ அவங்களைக் கண்டுக்காமல் எங்களோடவே பேசிட்டு இருக்க, கொஞ்சம் உன் தாய்மாமன்கிட்டயும் பேசுப்பா” என்று அவர் சொல்ல,
“இல்லையே பெரியப்பா.. நான் வீட்டுக்குள்ள வந்த உடனே மாமாவைப் பார்த்து பேசுனேனே..” என்றான்.
‘எது? வந்து இருக்கேனான்னு ஒரு பேச்சுக்குக் கேட்டுட்டு நேரா உன் பெரியப்பன் காலுல போய் விழுந்தியே அதையாடா சொல்ற?? கொஞ்சமாச்சும் தாய்மாமன் என்கிற மரியாதை இருக்கா?’ என்று மனதில் நினைத்தவரின் பார்வை அப்படியே சாகரன், ஆதவன், வசந்தன், ககன் ஆகிய நால்வரின் மீது வரிசையாகப் பதிந்தது.
வசந்தனும் ககனும் அலைபேசியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, சாகரனும் ஆதவனும் அண்ணனைப் போலவே சிங்காரவேலனை அலட்சியமாகப் பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
‘அதுசரி.. முதல்ல பொறந்ததுக்கு மரியாதை தெரிஞ்சா தானே, அடுத்து பொறந்ததுங்களுக்கு எல்லாம் அது தெரியும்.. அண்ணன்காரன் அமைச்சர் ஆகிட்டான்ங்குற அதுப்பு.. எனக்கும் ஒரு நாள் வரும்டா, அப்போ பார்த்துக்கிறேன்..’ என்று மனதிற்குள் நினைத்த சிங்காரவேலன் அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் இருக்கையில் இருந்து எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு விறுவிறுவென வாசலை நோக்கி நடந்துச் செல்ல, நீலவேணி ஓட்டமும் நடையுமாக கணவரின் பின்னாடியே சென்றார்.
ரங்கநாயகி பதறியபடி அவர் பின்னாடியே போக எத்தனிக்க, “ம்மா.. நீ எங்க போற?” என்று கேட்டான் ஆதவன்.
“என் அண்ணன் கோவிச்சிக்கிட்டு போறார்டா”
“போனா போகட்டும் விடும்மா” என்று சாகரன் அலட்சியமாகச் சொல்ல,
“சும்மா இருடா.. பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட போறார்..” என பதறியவர், “அ..அண்ணே நில்லுண்ணே..” என்றபடியே வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.
“பொண்ணா? எது.. அந்த கத்தரிக்காய்க்கு கையும் காலும் முளைச்ச மாதிரி ஒன்னு இருக்கே.. அதையா சொல்றாங்க..” என்று சாகரன் நக்கலாகக் கேட்க,
“அதுல என்ன தப்பு இருக்கு?” என்ற ஞானப்பிரகாசத்தின் பார்வை புவியரசனின் மீது ஆராய்ச்சியாகப் படிய, அவன் அவரது பார்வையைத் தவிர்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
“என்னப்பா புவியரசா.. எதுவும் சொல்லாமல் எழுந்துப் போற?” என்று அவரும் விடாமல் வினவ,
“சென்னையில இருந்து கார்லயே வந்தது டையர்ட் ஆஹ் இருக்கு பெரியப்பா. நான் என் ரூமுக்குப் போறேன்” என்று பொதுவாகச் சொல்லி விட்டு மாடிப்படியில் ஏறப் போனவன் நின்று “ககன்..” என அழுத்தமான குரலில் அழைத்தான்.
அண்ணனின் அழைப்பு கூட காதில் கேட்காத அளவிற்கு அலைபேசியில் ஆழ்ந்து இருந்த ககனின் தோளைப் பிடித்து வசந்தன் உலுக்க, “என்னடா..” என்று அடிக்குரலில் சீறினான் ககன்.
“புவி அண்ணா உன்னைத் தான்டா கூப்பிடுறார்” என்று அவன் சொல்ல, ககன் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தான்.
மாடிப்படியில் நின்றவாக்கில் தலையை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த புவியரசனிடம் சென்றவன், “அண்ணா..” என்று அழைக்க,
“நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரம், அந்தஸ்து எல்லாம் இருக்கு. அதைக் கெடுக்குற மாதிரி நீ இன்னொரு தடவை தெருவுல இறங்கி ஆடுறதைப் பார்த்தேன்.. உன் கால் இரண்ரையும் உடைச்சிடுவேன்..” என்று நிதானமாக அதே சமயம் மிக கடுமையானக் குரலில் எச்சரித்தான்.
“சாரிண்ணா.. இனிமே ஆட மாட்டேன்” என்று அவன் தலை குனிந்து சொல்ல, தம்பியை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தவன் வேகமாக படியில் ஏறி தனது அறைக்குச் சென்றான்.
குடும்ப கௌரவமும் அந்தஸ்தும் தனது இரு கண்கள் போல் பாதுகாத்து வருபவன் தான் புவியரசன். அது அவன் அமைச்சராகி விட்டதால் வந்தவை அல்ல. அவன் இரத்தத்திலேயே ஊறிப் போன ஒன்று.
அதனால் தான் அவனை விட வசதி குறைவாக இருக்கும் சொந்த தாய்மாமனிடம் முகம் கொடுத்து பேசுவதையே கௌரவக் குறைச்சலாக எண்ணி உதாசீனம் செய்கின்றான்.
ஆனால் ரங்கநாயகிக்கு அண்ணன் உறவு வேண்டும். இப்போது கூட மகனின் செயலால் அவமானத்துடன் வெளியே சென்ற அண்ணனிடம் சென்று கண் கலங்கி நிற்க, தங்கையின் கண்ணீருக்காக மனம் இறங்கினாலும் இறுகியே முகத்துடனே காரின் அருகில் நின்று இருந்தார்.
“அண்ணே.. மனசுல எதையும் வச்சிக்காதீங்க அண்ணே..”
அதைக் கேட்டு ஒரு பக்கமாக உதட்டை வளைத்து சிரித்த சிங்காரவேலன், “இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது.. என்னைப் பார்த்தாலே உன் மவன்களுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சது தானே” என்றார் வேதனையுடன்.
“அப்படி எல்லாம் இல்லண்ணே..” என்று அவர் எதையோ கூறி சமாளிக்கப் பார்க்க,
கை நீட்டி அதைத் தடுத்த சிங்காரவேலன், “கவலைப்படாதே. உன் மவனுங்க என்னை உதாசீனம் படுத்துறதால, நான் இனிமே இங்க வரவே மாட்டேன்னு எல்லாம் ரோஷப்பட்டு சொல்ல மாட்டேன். ஆயிரம் இருந்தாலும் நீ என் கூட பொறந்த பொறப்பு. இது நீ வாக்கப்பட்ட வீடு. என்னால நீ எந்த இடத்துலயும் தலை குனிஞ்சி நின்னுடக் கூடாதுங்குறதுக்காக தான், வெட்க மானத்தை எல்லாம் விட்டுட்டு இந்த வீட்டு வாசப்படியை மறுபடி மறுபடியும் மிதிக்கிறேன்” என்றவர் மனைவியை ஒரு பார்வைப் பார்த்து விட்டு காரில் ஏறி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து நீலவேணியும் தவிப்புடன் ரங்கநாயகியைப் பார்த்துக் கொண்டே காரில் ஏறி அமர, “டிரைவர் வண்டியை எடுப்பா” என்றார் சிங்காரவேலன்.
கார் போர்ட்டிகோவில் இருந்து புறப்பட, ரங்கநாயகி செல்லும் அந்த காரையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டார்.
**********
இதே நேரம் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த ரயிலில் கம்பார்ட்மென்டே அதிரும் அளவுக்கு விஜய் ஆண்டனியின் பாடலை அலைபேசியில் அதிர விட்டு பாட்டுக்கு ஏற்றபடி நடனமாடினார்கள் கல்லூரிப் பெண்கள். அவர்களோடு இணைந்து அழகாக ஆடிக் கொண்டிருந்தாள் மதுமதி.
வருவோரும் போவோரும் அவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு போவதைக் கண்டு நெற்றியிலேயே அறைந்து கொண்ட வசுமதி தங்கையின் கையைப் பிடித்து இழுத்தாள்.
மதுமதி ஆடி கொண்டே “என்னக்கா..” என்று கேட்க,
“எதுக்குடி இப்படி ஆட்டம் போட்டுட்டு இருக்க? அமைதியா தான் உட்காரேன்..” என்றாள் தவிப்புடன்.
“அக்கா.. ஊருக்குப் போக இன்னும் 4 மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் சும்மாவே எப்படி உட்கார்ந்துட்டு வர்றது..”
“அதுக்குன்னு இப்படியா? போறவன் வர்றவன் எல்லாம் ஒரு மாதிரியா பார்த்துட்டு போறாங்கடி.. அசிங்கமா இருக்கு” என்று வசுமதி சொல்ல, மதுமதி இடுப்பில் கை வைத்து அக்காவை முறைத்தாள்.
“இப்போ ஒழுங்கு மரியாதையா அமைதியா என் பக்கத்துல உட்கார போறீயா? இல்ல, நான் வீட்டுக்கு ஃபோன் போடவா?” என்ற அவள் மிரட்ட,
“உட்கார்ந்து தொலையுறேன்..” என்று பல்லைக் கடித்த மதுமதி அக்காவின் அருகில் அமர்ந்தாள்.
“ஸ்நாக்ஸ் சாப்பிடுறீயா?” என்ற வசுமதி தனது கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை நீட்ட,
அவளைக் கோபமாக முறைத்துப் பார்த்த மதுமதி “ஒன்னும் தேவையில்ல போ..” என்று குழந்தைப் போல் உரைத்து விட்டு ஜன்னல் புறம் வெடுக்கென தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“வேணான்னா போடி..” என்ற வசுமதி அதன் பின்பு தங்கையை எந்த தொந்தரவும் செய்யவில்லை.
நேரம் அதன் போக்கில் கடக்க, மதுமதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கி விட்டதைக் கண்டு ரயிலின் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து இருந்தவளின் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் வசுமதி.
அதே நேரம் அவளது மடியில் இருந்த அலைபேசி அலற, சத்தத்தைக் குறைத்து விட்டு அழைப்பை ஏற்றாள்.
“வசுமதி.. இப்போ எங்க வந்துட்டு இருக்கீங்க?” என்று மறுமுனையில் இருந்த அவளது அம்மா சித்ரா கேட்க, அவளும் ஊரின் பெயரைக் கூறினாள்.
“இப்போ தானா அங்கே வர்றீங்க?”
“ட்ரெயின் லேட்ம்மா”
“சரி சரி.. நான் ஸ்டேஷனுக்கு கார் அனுப்பி இருக்கேன். பத்திரமா பார்த்து வாங்க. சின்னவ என்ன பண்றா?”
“அவ தூங்கிட்டாம்மா” என்றவள் மேலும் சிலவற்றைப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சில நிமிடங்கள் கழித்து தங்கையை உலுக்கிய வசுமதி, “ஏய் மதி.. எழுந்துரு” என்றாள்.
“ப்ச் ஏன்க்கா தூங்குறவளை எழுப்பி டார்ச்சர் பண்ற?” என்று சிணுங்கிக் கொண்டே தூக்கத்தைத் தொடர்ந்தவளைக் கண்டு சலித்துக் கொண்ட வசுமதி,
“சரி.. ஊர் வந்துருச்சு. நான் இங்கேயே இறங்குறேன். நீ இப்படியே தூங்கிட்டு போய் மதுரையில இறங்கிட்டு தாத்தாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லு. அவரே காரை எடுத்துட்டு மதுரை ஸ்டேஷனுக்கு வந்து உன்னை அழைச்சிட்டு வருவார்” என்று சொல்ல,
“தாத்தாவா?” என்று அலறியவள் அடித்துப் பிடித்து எழுந்து தனது பெட்டியை இழுத்துக் கொண்டு இறங்க தயாராகச் சென்று ரயில் கதவு அருகே சென்று நின்றாள் மதுமதி. அதைக் கண்டு நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்த வசுமதி, தனது பெட்டியைத் தள்ளிக் கொண்டு சென்றாள்.
“சீக்கிரம் வாக்கா.. வண்டி நின்னுருச்சு..” என்று மதுமதி கத்த,
“ஹான்.. வந்துட்டே இருக்கேன்டி..” என்றாள்.
இரயில் நிலையத்தில் இறங்கியதும் வேலைக்காரன் வந்து அவர்களது பெட்டிகளை வாங்கிக் கொண்டு போக, இருவரும் காரை நோக்கி நடந்துச் சென்றார்கள். அவர்களை ஒரு ஜோடி விழிகள் ரசனையுடன் நோட்டம் விட, வசுமதி சட்டென தனது நடையை நிறுத்தி விட்டாள்.
இரயில் நிலையத்திற்கு வெளியே வந்து விட்ட வசுமதிக்கு தங்களை யாரோ நோட்டம் விடுவது போல் உள்ளுணர்வு உந்த, சட்டென நடையை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள்.
“என்னக்கா தேடுற?” என்று மதுமதி கேட்க,
“ஒன்னும் இல்ல.. வா போலாம்..” என்ற வசுமதி காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டு தங்கையை முதலில் ஏறச் சொன்னாள்.
அவளைத் தொடர்ந்து தானும் காரில் ஏறியவள், “வண்டியை எடு..” என்றாள் டிரைவரிடம்.
கார் அங்கிருந்துப் புறப்பட, அந்த காரை பார்த்தபடியே கண்களில் ஆசை மின்ன இரயில் நிலையத்தில் இருந்து வெளிப்பட்டான் இந்திரன்.
“ஐயா.. நம்ம கார் அங்க இருக்கு”
இந்திரனின் அருகே வந்து நின்ற டிரைவர் கூற, அவன் தன் பார்வையைச் சற்றும் அகற்றாமல் “யார் அந்தப் பொண்ணு?” என்று கேட்டான்.
“எந்தப் பொண்ணுங்கய்யா?” என்று கேட்க,
பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவன், “இப்போ எனக்கு முன்னாடி ஒரு இரண்டு பொண்ணுங்க காருல ஏறிப் போனாங்களே.. நீ பார்க்கல?” என்று கேட்டான்.
“இல்லீங்களே..”
“போய்யா..” என்று இந்திரன் சலித்துக் கொள்ள,
“சரி.. நேரமாச்சு.. வாங்கய்யா வீட்டுக்குப் போலாம்” என்றவன் அவனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு காருக்குச் சென்றான்.
அவனுடன் புறப்பட்ட இந்திரன் இளித்தமேனிக்கே காரின் பின்னிருக்கையில் ஏறி அமர, கார் நகர்ந்தது. அவன் தன் போக்கில் அடிக்கடி தனியாகச் சிரித்துக் கொண்டே வர, பயத்துடன் கண்ணாடியின் வழியே அவனைப் பின்னால் திரும்பிப் பார்த்த டிரைவர் ‘என்னாச்சு ஐயாவுக்கு?’ என்று மனதில் நினைத்துக் கொண்டே காரை செலுத்தினான்.
வீட்டின் வாசலில் காரை நிறுத்திய டிரைவர், இறங்கி வந்து இந்திரனின் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
டிரைவர் மட்டும் தனியே வருவதைக் கண்ட லட்சுமி, “என் மகன் எங்கடா?” என்று கேட்க,
“சின்னய்யா காருல இருக்காருங்கம்மா” என்றான்.
உடனே வாசலுக்கு வந்த லட்சுமி காரில் சிரித்தமேனிக்கு அமர்ந்து இருந்த மகனைக் கண்டு முகச்சுளிப்புடன் அவனை நோக்கி நடந்து வந்தார்.
காரின் அருகே வந்து நின்றவர் “இந்திரா..” என்று அழைக்க, அது காதில் விழவே இல்லை.
மகனது நினைவு எல்லாம் வேறு எங்கோ இருப்பதை உணர்ந்தவர் அவனது தோளைப் பிடித்து உலுக்கி “என்னடா ஆச்சு உனக்கு?” என்று சத்தமாகக் கேட்க,
அதில் சுயநினைவை அடைந்த இந்திரன், “ஆன்.. அம்மா.. என்னம்மா..” என்று பதற்றத்தில் திக்கித் திணறினான்.
“வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது. நீ ஏன்டா இன்னும் கார்லயே உட்கார்ந்து இருக்குற?” என்று அவர் கேட்க,
பின்னந்தலையைக் கோதியவன், “அது.. அது.. ஏதோ ஞாபகத்துல.. கவனிக்கலம்மா..” என்று விட்டு காரில் இருந்து இறங்கி வீட்டினுள் சென்றான்.
மகனது வரவிற்காக காத்திருந்த தயாநிதி மகனை அணைத்து விடுவித்து “எப்படிப்பா இருக்க?” என்று நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கேன்ப்பா” என்றான் புன்னகையுடன்.
“பசியோட வந்து இருப்ப. அம்மா உனக்காக சமைச்சி வச்சிருக்கா..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“நான் ட்ரையின்ல வரும் போதே சாப்பிட்டேன்ப்பா..” என இடையில் புகுந்து கூறினான் இந்திரன்.
“ட்ரையின்ல விக்குறது எல்லாம் ஏன்ப்பா வாங்கி சாப்பிடுற? எனக்கு ஒரு ஃபோன் போட்டு இருந்தா, நானே ஆளை விட்டு சாப்பாடு கொடுத்து இருப்பேன்ல்ல” என்று அவர் கடிந்து கொள்ள,
“அதனால தான் சொல்லல..” என சிரித்துக் கொண்டே கூறி கண்ணடித்தவன், மாடிப்படியில் ஏறி அவனது அறைக்குச் சென்றான்.
தயாநிதி பெரியப் பணக்காரர் தான். இந்திரன் அவருக்கு ஒரே மகன். அவனைத் தனது தொழில் வாரிசு ஆக்க அவர் முயற்சிக்க, அவன் ‘எனக்கு இந்த தொழில் எல்லாம் வேண்டாம்’ என்று கூறி விட்டு வனவிலங்குகளைப் படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராகி காடு, மலை எனச் சுற்றி வருகிறான்.
இப்போது கூட ஒரு காட்டில் 6 மாதமாக தங்கி இருந்தவனை அவனது அம்மா தான் வற்புறுத்தி வீட்டிற்கு வரச் சொல்லி அழைக்க, அவனும் அன்னையின் தவிப்பிற்காகக் கிளம்பி வந்தான்.
தனது அறைக்கு வந்து படுக்கையில் படுத்த இந்திரன் கேமராவை எடுத்து அதில் இருந்த அவனது மனம் கவர்ந்த தேவதையின் புகைப்படத்தை ஆசையுடன் வருடினான்.
*********
“அம்மாஅஅஅ..” என உற்சாகமாகக் கத்திக் கொண்டே வீட்டிற்குள் ஓடி வந்த மதுமதி சித்ராவை அணைக்க முயல,
“ஏய்.. தாத்தா இருக்கார்டி..” என்று அடிக்குரலில் கூறி வலதுபக்கமாக கண் காட்டினார்.
தாத்தா பெயரைக் கேட்டதும் சடன்பிரேக் போட்டது போல் நின்று விட்டவள் திரும்பிப் பார்க்க, ஹால் சோஃபாவில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்து இருந்தார் திருநீலகண்டன். அவரது பார்வை மேலிருந்து கீழ் வரை அழுத்தமாகப் பதிய, மதுமதி தாயின் பின்னாடி ஒளிந்து கொண்டாள்.
“வெளியே வா..” என்று அவர் இறுக்கமான குரலில் கூற, அவளும் அன்னையை விட்டு தள்ளி நின்றாள்.
“என்ன டிரஸ் இது?” அவர் அடிக்குரலில் சீற, அவள் அசடு வழிந்துக் கொண்டே பின்னந்தலையைச் சொறிந்தாள். அவர் கடிந்து கொள்ளும் அளவுக்கு அவள் ஒன்றும் மோசமாக எல்லாம் உடை அணியவில்லை. சாதாரணமாக கல்லூரி மாணவர்கள் அணியும் சட்டையும் பேண்ட்டும் தான் அணிந்து இருந்தாள்.
“சின்னப் பசங்க போடுற மாதிரி ஒரு சட்டை, முட்டிக்கால் தெரியுற மாதிரி ஒரு பேண்ட்” என்றவர் மகளை முறைத்துப் பார்த்து “எல்லாம் உன்னை சொல்லனும்” என்று கோபத்தில் பல்லைக் கடித்தார்.
“ஏன்டி வரும்போது போட்டுட்டு வர டிரஸ் அனுப்பி வச்சேன் இல்ல, அதை விட்டுட்டு இதை ஏன்டி போட்டு வந்து என் மானத்தை வாங்குற?”
சித்ரா சின்ன மகளின் காதில் குசுகுசுக்க, “நாம தான் ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்குப் போக போறோமே. அந்த நேரத்துல தாத்தா எங்கிருந்து முழிச்சி இருக்கப் போறாருன்னு இந்த டிரஸ் போட்டுட்டு வந்துட்டேன்ம்மா” என்றாள் அன்னைக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவர் அவளை முறைத்துப் பார்க்க, “தாத்தா..” என்றபடி வீட்டினுள் வந்தாள் வசுமதி.
அவளது உடையைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்த திருநீலகண்டன், “பெரியவளைப் பார்த்துக் கத்துக்கோ..” என்று மதுமதியை முறைத்துப் பார்த்து கூறினார்.
வசுமதியுமே வரும் போது மதுமதி அணிந்து இருந்த போல சட்டையும் பேண்டும் தான் அணிந்து இருந்தாள். ஆனால், வீட்டிற்குள் வரும் போது பாவாடை தாவணி அணிந்து இருப்பதைக் கண்டு மதுமதி விழி விரித்துப் பார்க்க, தாத்தாவுக்குத் தெரியாமல் தங்கையைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்து சிரித்தாள் வசுமதி.
“அடிப்பாவி..” என வாயைப் பிளந்த மதுமதி, “தாத்தா அவளை நம்பாதீங்க. அவ நடிக்குறா..” என்று அவசரமாக உரைக்க,
“வாயை மூடு” என பல்லைக் கடித்தார் திருநீலகண்டன்.
வசுமதி தங்கையைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க, அக்காவை முறைத்துப் பார்த்தவள் “துரோகி..” என சத்தம் வராமல் முணுமுணுத்தாள்.
“போடி..” என தங்கையின் முறைப்பைப் புறம் தள்ளியவள், தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க,
“ஐயோ.. ஹிந்தி சீரியல் எல்லாம் பார்த்துட்டு வந்து நடிச்சி கொட்டுறாளே..” என்று சிணுங்கினாள் மதுமதி.
அது தள்ளி இருந்த திருநீலகண்டன் காதில் வேண்டுமானால் விழாமல் இருக்கலாம். ஆனால் அருகிலேயே இருக்கும் சித்ராவின் காதில் விழாமல் போகுமா?
தலையைத் திருப்பி சின்ன மகளை முறைத்துப் பார்த்தவர், “என்னவோ பண்ணிட்டு போறா.. அவ ஒன்னும் உன்னை மாதிரி போற இடத்துல எல்லாம் என் மானத்தை வாங்கிட்டு இருக்குறது இல்லல்ல” என்று மூத்த மகளுக்கு பரிந்து பேசினார்.
அதைக் கேட்டு கடுப்பான மதுமதி, “ரொம்பத் தான் பெருமை.. அவளும் என்னை மாதிரி தான் டிரஸ் போட்டுட்டு வந்தா.. வீட்டுக்கு வந்ததும் கார்லயே டிரஸ் மாத்திட்டு வந்து தாத்தா முன்னாடி அடக்க ஒடுக்கமான பொண்ணு போல சீன் போடுறா. அதை அவரும் நீயும் நம்புறீங்க. ஹூம்.. உண்மையா இருந்தா யார் நம்புறாங்க? பொய்யா நடிச்சி கொட்டுறவங்களை தான் இந்த உலகம் தலை மேல தூக்கி வச்சி ஆடும்” என்று சலித்துக் கொண்டாள்.
“அப்புறம் காலேஜ் படிப்பு எல்லாம் எப்படி போச்சு? எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதுனீயா?” என்று கேட்க,
“நல்லா எழுதி இருக்கேன் தாத்தா” என்றாள் வசுமதி.
“சரி.. நாளையில இருந்து அம்மாவோட ஆபீஸ்க்குப் போ..” என்று அவர் சொல்ல, அவளும் சரி என்பது போல தலை அசைத்தாள்.
“தாத்தா.. நானும் தானே எக்ஸாம் எழுதிட்டு வந்து இருக்கேன். எனக்கு மட்டும் நீங்க எதுவுமே கேட்கலையே” மதுமதி இடையில் புகுந்து மனதாங்கலுடன் கேட்க,
“உங்கிட்ட என்ன கேட்குறது.. பாஸ் ஆவது பண்ணிருவீயா?” என்று அவர் சந்தேகமாகக் கேட்டார்.
“தாத்தா..” என்று அவள் சிணுங்க, சித்ரா அடக்க முடியாமல் வாயை மூடி சிரித்து விட்டார்.
“குடும்பமா கூடி நின்னு என்னை இன்சல்ட்க்கு மேல இன்சல்ட் பண்ணிட்டீங்க இல்ல.. இந்த மதுமதிக்கும் ஒரு நாள் வரும். அப்போ பார்த்துக்கிறேன் உங்க எல்லாரையும்..” என்று சபதம் இட,
“ஆமா இவ பெரிய இது.. போடி.. போய் குளிச்சிட்டு வா.. டின்னர் எடுத்து வைக்கிறேன்” என்று சின்னவளின் தோளில் தட்டி விட்டு டைனிங் ஹாலை நோக்கி சென்றார் சித்ரா.
மதுமதி அதிர்ந்து போய் தாத்தாவையும் அக்காவையும் பார்க்க, அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். மதுமதி கோபத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள்.
*******
அன்றிரவு உணவுக்குப் பின் புவியரசன் ஹால் சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி சேனலை வைத்து பார்த்துக் கொண்டு இருக்க, “நீங்க பேசுங்க..” என்று கணவரின் தோளைச் சுரண்டினார் ரங்கநாயகி.
மனைவியைப் புரியாமல் நோக்கியவர், “என்னடி?” என்று சைகையால் கேட்டார்.
“நேத்து சொன்னேனே..” என்பது போல் அவர் சைகை செய்ய,
“ஓ.. அதுவா..” என்றவர் மூத்த மகனின் முகத்தைப் பார்த்தார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி ஒன்றை அவன் புருவ முடிச்சுடன் பார்த்து கொண்டிருக்க, “புவி..” என்றழைத்தார் சிவப்பிரகாசம்.
அது அவனது காதிலேயே விழவில்லை. அவர் மறுபடியும் மனைவியின் முகத்தைப் பார்க்க, “சத்தமா கூப்பிட்டு பேசுங்க..” என்றார் மெல்லியக் குரலில்.
மீண்டும் மகனது முகத்தைப் பார்த்தவர், “புவி..” என்று சற்று குரலை உயர்த்தி அழைக்க,
“ம்.. சொல்லுங்கப்பா..” என்றான் டிவியில் இருந்து பார்வையை அகற்றாமலேயே.
அவருக்கோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மறுபடியும் மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.
‘என்னை ஏன் பார்க்குறீங்க.. அவங்கிட்ட பேசுங்க’ என்பது போல் அவர் மீண்டும் சைகையில் பேச, அவர் பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து ஹாலில் இருந்து தள்ளி வந்து விட்டார்.
“என்னங்க.. ஏன் எழுந்து வந்துட்டீங்க?”
“எனக்கு எப்படி ஆரம்பிக்குறதுன்னே தெரியலடி..” என்றார் மெல்லியக் குரலில்.
“ஐயோ! உங்களை வச்சிக்கிட்டு ஒன்னுமே செய்ய முடியாது” என்று கூறி தன் நெற்றியில் அறைந்து கொள்ள,
“ஏன்டி இப்படி அடிச்சிக்கிற?”
“ம்.. என் தலையெழுத்து..”
“அதுக்கென்ன.. நல்லா தானே இருக்கு..” என்று அப்பாவியாகக் கேட்க, ரங்கநாயகியின் பொறுமை காற்றில் பறந்து போனது.
அவர் கணவரை தீயாய் உறுத்து விழிக்க, அதில் பயந்து போனவர், “சரி சரி முறைக்காதே. நான் இப்போவே போய் அவங்கிட்ட பேசுறேன்..” என்றார்.
“இல்ல.. இல்ல.. வேணாம்.. நான் பெரியவரை பேசச் சொல்றேன்..” என்ற ரங்கநாயகி நேரே மூத்தாரைத் தேடிச் சென்று விஷயத்தைக் கூறினார்.
“ஏன்ம்மா.. இதுக்கு அவன் என்ன பதில் சொல்லுவான்னு உனக்கும் எனக்கும் நல்லாவே தெரியும். இதை நான் அவங்கிட்ட கேட்டு அவன் வாயால தெரிஞ்சிக்கிட்டா தான் உனக்கு திருப்தியா இருக்குமா?” என்று ஞானப்பிரகாசம் கேட்க, ரங்கநாயகியின் முகம் வாடிப் போனது.
“சரி.. வா.. ஆசைப்படுற.. கேட்டுப் பார்ப்போம்” என்றவர் சக்கரநாற்காலியை இயக்கிக் கொண்டு ஹாலுக்குச் சென்றார்.
அவர் வருவதைப் பார்த்த புவியரசன், “பெரியப்பா.. நீங்க இன்னும் தூங்கலையா?” என்று அக்கறையாகக் கேட்க,
“இல்லப்பா.. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்ன்னு வந்தேன்” என்றார்.
“இல்ல.. நீ எப்பவுமே கட்சி அது இதுன்னு பிஸியா தானேப்பா இருக்குற. அதான் இப்போவே பேசிடலாம்ன்னு வந்தேன்”
“சரி.. சொல்லுங்க பெரியப்பா.. என்ன விஷயம்..” என்று அவன் கேட்க, அவர் திரும்பி ரங்கநாயகியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
“அடுத்த வாரம் உனக்கு ஏதாவது வேலை இருக்காப்பா?” என்று அவர் கேட்க,
“எதுக்கு பெரியப்பா கேட்குறீங்க?” என்று கேட்டான் புவியரசன்.
“உன் தாய்மாமன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்ன்னு தான்ப்பா கேட்டேன்”
“எதுக்கு?”
“பொண்ணு பார்க்குறதுக்கு தான்” என்று ஞானப்பிரகாசம் சொல்ல, புவியரசனின் முகம் இறுகிப் போனது.
“யாருக்கு?”
“இதென்ன கேள்வி.. உனக்குத் தான்.. மூத்தவனுக்குத் தானே முதல்ல கல்யாணம் பண்ணனும்..” என்று அவர் சொல்ல,
பெரியப்பாவின் மீதிருந்த பார்வையை விலக்கி தாயை ஒரு பார்வை பார்க்க, அவர் அவனது பார்வையில் தடுமாறிப் போனார்.
தாய்க்கு அருகில் இருந்த தந்தையை அழுத்தமாகப் பார்த்தவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க எங்கிட்ட பேச வந்த விஷயமும் இது தானா?” என்று கேட்க, அவர் ‘ஆமாம்’ என்பது போல் எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தார்.
அவனது பார்வையில் அனல் கூட, “அது இருக்கட்டும்.. உன் பதில் என்னன்னு சொல்லுப்பா” என்று கேட்டார் ஞானப்பிரகாசம்.
நேருக்கு நேர் பெரியப்பாவின் விழிகளை அழுத்தமாகப் பார்த்தவன், “உங்க எல்லாரோட நோக்கம் என்ன? எனக்கு கல்யாணம் பண்றதா? இல்ல, அவங்க அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளாக்குறதா?” என்று கேட்க,
ரங்கநாயகி வெடுக்கென, “இரண்டும் தான்.. நீ என் அண்ணன் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்..” என்றார்.
நிதானமாக தாயை நிமிர்ந்துப் பார்த்தவன், “அது இந்த ஜென்மத்துல நடக்காது” என அழுத்தமாக உரைத்து விட்டு எழுந்துச் சென்றான்.
“நில்லுடா..” என்று ரங்கநாயகி கத்த, மாடிப்படியில் கால் வைத்த புவியரசன் நின்று தாயைத் திரும்பிப் பார்த்தான்.
அவனிடம் சென்று நின்றவர், “எதுக்குடா இப்படி பேசிட்டு போற? என் அண்ணன் பொண்ணுக்கு என்ன குறைச்சல்? எதுக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற?” என்று ஆதங்கமும் கோபமுமாகக் கேட்க,
ரங்கநாயகியின் குரல் இப்போது தாழ்ந்து ஒலிக்க, “இருக்கட்டும்மா.. அதுக்காக எல்லாம் நான் அந்தாள் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு மனைவியா வர்றவ நம்ம அந்தஸ்துக்கு கொஞ்சமும் குறையாத அந்தஸ்தும் கௌரவமும் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவளா தான் இருக்கனும். அந்தாளுக்கு அந்த தகுதி இருக்கா?” என்று பல்லைக் கடித்தான்.
“மரியாதையா பேசு புவி.. அவர் என் அண்ணன்”
அவர் அவனை முறைத்து பார்த்து கூற, அன்னையின் கோபத்தைக் கண்டு நக்கலாகச் சிரித்தவன், “அந்த ஒரு காரணத்தால மட்டும் தான் அந்தாளை நான் இப்போ வரைக்கும் சும்மா விட்டு வச்சி இருக்கேன். இல்லன்னா, அந்தாள் தகுதிக்கு எல்லாம் இந்த வீட்டு வாசப்படியைக் கூட நான் மிதிக்க விட்டு இருக்க மாட்டேன்” என ஒவ்வொரு வார்த்தையையும் அகங்காரத்துடன் அழுத்தி கூறினான்.
மேலும் தொடர்ந்தவன், “இன்னொரு தடவை அந்தாள் பேச்சை எடுத்துக்கிட்டு எங்கிட்ட வந்துறாதீங்க.. நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். கோபத்துல குடும்பத்தோட பெட்ரோல் ஊத்தி கொளுத்துனாலும் கொளுத்திடுவேன்” என்று மிரட்ட, ரங்கநாயகியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.
“புவி.. என்னப்பா இப்படி பேசுற?” ஞானப்பிரகாசம் இடையில் புக,
திரும்பி அவரைப் பார்த்தவன், “எல்லாத்தையும் இப்போவே தெளிவா சொல்லிடனும்ல்ல பெரியப்பா. நாளை பின்ன நான் எதுவும் சொல்லலன்னு என் மேல எந்த பழியும் வந்துற கூடாது இல்ல” என்றவாறே அன்னையை நோக்கினான்.
ரங்கநாயகிக்குச் சட்டென்று வியர்த்து போனது. “என்னம்மா பயந்துட்டீங்களா..” என்று சிரித்துக் கொண்டே தாயின் கன்னத்தைத் தீண்ட போக, அவர் பயத்துடன் இரண்டடி பின்னால் சென்றார்.
புவியரசன் சொன்னதைச் செய்யக் கூடியவன் ஆயிற்றே.. அந்த பயம் அவருக்கு இருக்க தானே செய்யும்.
அதனைக் கூட ரசித்து பார்த்தவன், “இப்போ என்ன உங்களுக்கு.. எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கனும்.. அவ்ளோ தானே.. நானே நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாதிரியான ஒரு நல்ல வரனை பார்த்து சொல்றேன். நீங்களும் அப்பாவும் போய் பேசி முடிச்சிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு மாடிப்படியில் ஏறி அவனது அறைக்குச் சென்றான்.
ரங்கநாயகி தவிப்புடன் மூத்தாரின் முகத்தைப் பார்க்க, “அவன் குணம் தெரிஞ்சது தானேம்மா.. இந்தப் பேச்சை இதோட விட்டுடலாம்” என்ற ஞானப்பிரகாசம் தம்பியின் புறம் திரும்பி பார்த்துக் கொள்ளும்படி கண் ஜாடை காட்டி விட்டு சக்கரநாற்காலியை இயக்கிக் கொண்டு அவரது அறைக்குச் சென்றார்.
சிவப்பிரகாசம் மனைவியின் அருகே செல்ல, “அவன் எப்படி பேசிட்டுப் போறான் பாருங்க.. இதுக்கு எல்லாம் காரணம் யாரு.. உங்க அப்பா தான். அவர் தான் அந்தஸ்து அது இதுன்னு சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்தார். இன்னைக்கு அதையே பிடிச்சிக்கிட்டு என் அண்ணன் பொண்ணையே வேணாம்ன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டான்” என்று அழுகையில் மூக்கை உறிஞ்சினார்.
அவருக்கோ என்ன சொல்லி மனைவியைத் தேற்றுவது என்றே தெரியவில்லை. ஆகையால், மௌனமாகவே இருந்து விட்டார்.
அதற்கும் கோபம் கொண்ட ரங்கநாயகி, “நான் ஒருத்தி.. யார்க்கிட்ட புலம்புறதுன்னு தெரியாமல் உங்கிட்ட போய் புலம்புறேன் பாருங்க..” என்றவாறே தோளில் இருந்த கணவனின் கையை உதறித் தள்ளி விட்டு அழுது கொண்டே அவர்களது அறைக்குச் சென்றார்.
*****
‘மதி கன்ஸ்ரக்ஷன்ஸ்’ என பெயர் தாங்கிய 7 மாடி கட்டிடத்திற்குள் நுழைந்த கார் அலுவலக வாசலில் நிற்க, சித்ராவும் வசுமதியும் புன்னகை முகமாக இறங்கினார்கள்.
அவர்களின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்த மேனேஜரும் மற்ற அலுவலக வேலையாட்களும் வசுமதி காரில் இருந்து இறங்கியதும் ஒவ்வொருவராக வந்து பூங்கொத்தை வழங்கி “கங்ராட்ஸ் மேடம்..” என வாழ்த்தினார்கள்.
“தேங்க்யூ..” என சிரித்தவாறே அவர்கள் நீட்டிய பூங்கொத்தை அவள் வாங்கிக் கொள்ள,
“ஸ்டாப்ஸ்.. ஏற்கனவே உங்களுக்குச் சொன்னது தான். இன்னையில இருந்து என் பொண்ணு வசுமதியும் நம்ம கம்பெனியில தான் வேலை பார்க்கப் போறா” என்று முறையாக அறிவித்தார்.
என்ன தான் மகள் எம்.பி.ஏ. படிப்பு எல்லாம் படித்து விட்டு வந்து இருந்தாலும், ஒரு பெரிய நிருவனத்தை நிர்வகிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. தொழில் ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் நிறைய கற்று கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பில் மொத்த பொறுப்பையும் மூத்த மகளிடம் கொடுத்து விட்டு சித்ராவினால் அக்கடா என்று வீட்டில் உட்கார முடியாது. இது அவர் 15 வருடங்களாக கஷ்டப்பட்டு கட்டி காத்து வைத்து இருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியம்.
அடுத்து மகளை அழைத்துக் கொண்டு சைட் விசிட் செய்தவர் அங்கு என்னென்ன வேலை எல்லாம் நடக்கிறது என்று விளக்கினார்.
அப்போது இன்ஞினியர் அங்கு ஓடி வர, “வேலை எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்டார் சித்ரா.
“எல்லாம் நல்லா போகுது மேடம்”
“பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே.. ஆர்.ஆர். நகர்ல இருக்குற பில்டிங்ல வேலை எல்லாம் அப்படியே நிக்குது.. அடுத்த மாசத்துக்குள்ள எல்லா வேலையும் முடிச்சிட்டு பில்டிங்கை ஹேண்ட்ஓவர் பண்ணனும். ஞாபகம் இருக்குல்ல..” சித்ரா அவனைப் பார்வையாலேயே மிரட்ட,
“மேடம்.. மழையினால கொஞ்ச நாள் வேலை நின்னுடுச்சு” என மென்று முழுங்கினான் இன்ஞினியர்.
“இந்த சில்லி ரீசன் எல்லாம் எனக்கு வேணாம். வேலை மட்டும் ஒழுங்கா நடக்கல.. உன் சீட்டை கிழிச்சிடுவேன்” என்று அதிரடியாக சொல்லி விட்டு முன்னே நடக்க, வசுமதி வியந்துப் போனாள்.
அன்றைய தினம் முழுவதும் அன்னையுடன் இருந்த வசுமதிக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அது அவள் வீட்டில் பார்க்கும் சித்ரா வேறு. அலுவலகத்தில் பார்க்கும் சித்ரா வேறு என்று.
வீட்டில் தந்தை சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவர், அலுவலகத்தில் யாரையும் அவர் முன்பு பேச விடுவதில்லை. வீட்டில் தந்தை சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டுபவர், அலுவலகத்தில் 100 பேரை ஆட்டி வைக்கிறார்.
காரில் வரும் போது வசுமதி தாயை அடிக்கடி வியப்புடன் பார்த்துக் கொண்டு வர, மடிக்கணினியில் அலுவலக வேலையில் ஆழ்ந்து இருந்த சித்ரா, மகளின் புறம் திரும்பாமலேயே “ஏதாவது கேட்கனுமா?” என்று கேட்டார். அவளுக்கு ஒரே ஆச்சரியம்.
மகளிடம் இருந்து எந்த பதிலும் வராததைக் கண்ட சித்ரா, அவளை ஏறிட்டுப் பார்த்து என்னவென்று புருவத்தை உயர்த்த, “வீட்டுல நாங்க பார்த்த அம்மாவுக்கும் இங்க இருக்குற அம்மாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே.. எப்படிம்மா?” என தன் மனதில் இருப்பதைத் தயங்காமல் கேட்டு விட்டாள்.
அதைக் கேட்டு மெலிதாகப் புன்னகைத்த சித்ரா, “வீட்டுல நான் என் அப்பாவுக்குப் பொண்ணு. உங்களுக்கு அம்மா. அப்பா கொஞ்சம் பழைய ஆள். குடும்ப பாரம்பரியம், கௌரவம் எல்லாம் பார்ப்பார். சின்ன வயசில இருந்து அவர் சொன்ன எதுக்கும் நான் மீறி பேசுனதே இல்ல. ரொம்ப கட்டுக்கோப்பா தான் என்னை வளர்த்தார்” என்று சொல்ல,
“அப்புறம் எப்படி இப்படி மாறிப் போனீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள் வசுமதி.
“அதுக்கு உங்க அப்பா தான் காரணம். அவர் தான் எனக்கு பிஸினஸ் பண்றது எப்படின்னு சொல்லிக் கொடுத்தார். அவர் மட்டும் இன்னைக்கு உயிரோட இருந்திருந்தா, இந்த கம்பெனியை இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு போய் இருப்பார்.. ஆனா விதி.. அதுக்குள்ள ஒரு விபத்துல சிக்கி நம்மை எல்லாரையும் விட்டுட்டு போயிட்டார்” என்றவரின் கண்கள் கணவரின் நினைவில் கலங்கிப் போனது.
வசுமதி தாயின் கைகளை ஆறுதலாகப் பற்ற, சித்ரா தன்னை தானே தேற்றிக் கொண்டு மகளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அன்று முதல் வசுமதி தினமும் அன்னையுடன் அலுவலகத்திற்குச் சென்று வந்தாள். அவர்கள் சென்ற பின்பு வீட்டில் தனியாக இருந்த மதுமதி தனது பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றினாள். யார் எங்கு சென்றாலும் மாலை 6 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பது திருநீலகண்டனின் நிபந்தனை.
அதனை சித்ராவும் வசுமதியும் கடைப்பிடித்து விடுவார்கள். ஆனால் மதுமதி மட்டும் கேட்கவே மாட்டாள். அவளுக்குப் பாவம் பார்த்து வசுமதியும் சித்ராவும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி திருநீலகண்டனைச் சமாளிப்பது வழக்கம்.
அப்படித் தான் இன்றும் தோழிகளுடன் சினிமாவுக்குச் சென்று இருந்த மதுமதி வீட்டிற்கு வர தாமதம் ஆகி விட, அக்காவுக்கு அழைத்து கெஞ்சினாள்.
“அக்கா அக்கா ப்ளீஸ்க்கா.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தாத்தாக்கிட்ட எதையாவது சொல்லி சமாளிக்கா.. என் செல்ல அக்கா இல்ல..” என்று மதுமதி கெஞ்ச,
“ம்ஹூம்.. முடியாது..” என்றாள் வசுமதி.
“இந்த ஒரு தடவை மட்டும்.. ப்ளீஸ்க்கா.. நீ என்ன கேட்டாலும் நான் செய்றேன்..”
“என்ன கேட்டாலும்..”
“ம்.. என்ன கேட்டாலும்..” என்று மதுமதி சொல்ல,
தங்கைக்கு பாவம் பார்த்தவள், “சரி எப்போ வருவ?” என்று கேட்டாள்.
“சரியா அரை மணி நேரத்துல வந்துருவேன்” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே, திருநீலகண்டன் தனது தொண்டையைச் செருமும் சத்தம் அவளுக்குப் பின்னால் கேட்டது.
உடனே அலைபேசியை கீழே இறக்கி விட்ட வசுமதி, “தாத்தா..” என்று அழைக்க,
“எங்க உன் தங்கச்சி?” என்று கேட்டார்.
“அவ.. மாடியில அவ ரூம்ல இருக்குறா தாத்தா..” என்று சொல்ல,
“ரூம்ல என்ன பண்றா?” என்று வினவினார்.
“அது.. அவளுக்கு தலைவலியாம். தூங்குறா..” என்று கூறி சமாளித்தவள், அலைபேசியில் இன்னமும் லைனில் இருக்கும் தங்கையின் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
“சாப்பிட்டாளா?” என்று அவர் கேட்க, அவள் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.
“என்ன.. சாப்பிட்டாளா? இல்லையா?”
“ம்.. அவ சாப்பிட்டா தாத்தா.. நீங்க வாங்க.. உங்களுக்கு நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
“உன் அம்மா எங்க?”
“அம்மா ஆபிஸ் ரூம்ல இருக்காங்க” என்று அவள் பதில் சொல்ல, திருநீலகண்டன் டைனிங் ஹாலுக்குச் சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டவர் லிப்ட்டில் ஏற, வசுமதி ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டாள்.
முதல் தளத்தில் வெளியேறிய திருநீலகண்டன் மதுமதியின் அறையை நோக்கி நடப்பதைக் கண்ட வசுமதிக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.
“ஐயோ! போச்சு.. மாட்டப் போறோம்..” என்று மனதில் நினைத்தவள், “தாத்தா..” என்று கத்தி அழைத்தாள்.
அதில் கதவில் கை வைக்கப் போனவர் கதவைத் திறக்காமல் ‘என்ன’ என்பது போல் பேத்தியைத் திரும்பிப் பார்த்தார். உடனே விடுவிடுவென மாடிப்படியில் ஏறி வந்தவள் “அதான் மதி சாப்பிட்டுட்டான்னு சொன்னேனே தாத்தா” என்று கூற,
“இருக்கட்டும்மா.. தலைவலின்னு சொன்னீயே.. அதான் இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்றவர் சட்டென கதவைத் திறந்து விட்டார்.
வசுமதி பயத்துடன் கண்களை இறுக மூடிக் கொள்ள, கதவைத் திறந்துப் பார்த்தவரின் முகம் சாதாரணமாக இருந்தது.
“என்ன இன்னும் கத்தாமல் இருக்கிறார்..” என்று மனதில் நினைத்த வசுமதி மெல்ல கண்களைத் திறந்து பார்க்க, அவரது முகம் சாதாரணமாக இருப்பதைக் கண்டு குழம்பிப் போனவள், அறையை எட்டிப் பார்த்தாள்.
மதுமதி கட்டிலில் கண்களை மூடி படுத்து இருப்பதைக் கண்டு விழி விரித்த வசுமதி, ‘அடிப்பாவி.. இவ எப்போ ரூமுக்கு வந்தா.. நான் கீழேயே தானே இருந்தேன்’ என்று மனதிற்குள் நினைத்தாள்.
“மாத்திரை போட்டாளா?” என்று திருநீலகண்டன் வசுமதியைப் பார்த்து வினவ,
“ம்..” என எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.
“சரி.. பார்த்துக்கோ..” என்றவர் தனது அறையை நோக்கி நடந்தார்.
அவர் சென்றதும் அறைக்குள் நுழைத்து கதவைத் தாழ்ப்பாள் போட்ட வசுமதி.. “நடிச்சது போதும்.. எழுந்துருடி..” என்று தலையணை தூக்கி தங்கை மேல் போட,
உடம்புக்கு முடியாமல் இருப்பவள் போல் எழுந்த மதுமதி, “என்னக்கா.. நானே தலைவலியில கஷ்டப்படுறேன்.. என் மேல போய் இவ்ளோ பெரிய வெயிட்டை தூக்கிப் போடுறீயே.. இது உனக்கே நியாயமா?” என்று நடித்துக் கொட்டினாள்.
“ஃபிராடு.. எங்கிட்டயே நடிக்கிறீயா?” என்றவள் தங்கையை அடிக்கப் பாய, அதில் இருந்து தப்பித்த மதுமதி அதற்கு மேல் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்.
“போதும்.. போதும்.. நீ எப்படிடி மேல வந்த?”
“அதெல்லாம் சீக்ரெட். சொல்ல முடியாது” என்று கூறி கண்ணடித்தவளைக் கடுப்புடன் பார்த்தவள்
“அடுத்த முறை ஹெல்ஃப்ன்னு வருவ இல்ல, அப்போ பேசிக்கிறேன்..” என்று விட்டு அவளது அறைக்குச் சென்றாள்.
*********
அப்படியே நாள்கள் வாரங்களாக பறந்து ஓட, திடீரென ஒரு நாள் தயாநிதியும் லட்சுமியும் திருநீலகண்டனைச் சந்திக்க வந்தார்கள்.
அவர்களைப் புரியாத பார்வை பார்த்தவர் “யார் நீங்க?” என்று வினவ,
“இந்திரன் இன்டஸ்ட்ரீஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா?” என்று கேட்டார் தயாநிதி.
“ம்.. கேள்விப்பட்டு இருக்கேன்”
“அது என்னோட கம்பெனி தான். நான் தயாநிதி.. இவ என் மனைவி லட்சுமி” என்று அவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, லட்சுமி அவரைப் பார்த்து வணக்கம் வைத்தார்.
“சரி.. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க?” என்று அவர் கேட்க,
“எல்லாம் நல்ல விஷயம் தான். மூனு மாசத்துக்கு முன்னே உங்க பேத்தியை என் பையன் ட்ரெயின்ல வரும் போது பார்த்து இருக்கான். அப்போவே அவனுக்கு பொண்ணை ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அதை மனசுக்குள்ளே வச்சி இருந்தவன், நாங்க பார்க்குற பொண்ணை எல்லாம் வேணான்னு சொல்லிட்டே இருந்தான்.
ஏன்னு காரணம் கேட்டப்போ தான் உங்க பேத்தியைப் பத்தி சொன்னான். அதான் அவன் ஆசைப்பட்ட பொண்ணையே பேசி முடிச்சிடலாம் வந்து இருக்கோம்” என தயாநிதி கூறிய கணம் திருநீலகண்டனின் முகம் இறுகிப் போனது.
அதைக் கவனிக்காத லட்சுமி, “நாங்களும் உங்க அளவுக்கு வசதி படைச்சவங்க தான். எங்க சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசு எங்க மகன் இந்திரன் தான்” என்று ஆரம்பித்தவர் தன் போக்கில் மகனது அருமை பெருமைகளை அள்ளி விட,
“வாட்ச்மேன்..” என்று கோபமாகக் கத்தினார் திருநீலகண்டன்.
தயாநிதியும் லட்சுமியும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “ஐயா..” என்றபடி ஓடி வந்து நின்றான் வாட்ச்மேன்.
“கதவை சரியா மூடி வைக்குறது இல்லையா? கண்டதுங்க எல்லாம் நடு வீடு வரைக்கும் வந்து நிக்குதுங்க” என்று அவர்களை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே வாட்ச்மேனிடம் எரிந்து விழ, தயாநிதிக்கும் லட்சுமிக்கும் பெருத்த அவமானமாகிப் போனது.
இருவரும் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, “இதுங்களை வெளியே தள்ளிட்டு கதவை இழுத்து மூடு..” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.
“என்னங்க இப்படி பேசிட்டு போறார்? நாம என்ன தப்பா கேட்டுட்டோம்?” என்று லட்சுமி அங்களாயித்துக் கொள்ள,
“அம்மா.. பெரியவருக்கு காதல் கீதல்ன்னா சும்மா பிடிக்காதும்மா” என்றான் அங்கிருந்த வேலையாள் ஒருவன்.
மாடிப்படியில் கீழே இறங்கி வந்த இந்திரன் ஹால் சோஃபாவில் அமர, அவனுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தான் வேலைக்காரன். அதை வாங்கிக் கொண்டவன், “அம்மா எங்க காணோம்?” என்று கேட்க,
“அம்மாவும் ஐயாவும் வெளியே போய் இருக்காங்க சார்” என்றான்.
“அப்பாவுமா? எங்க?”
“தெரியாது சார்” என்றவன் அவனது வேலையைப் பார்க்க போய் விட, இருக்கையில் இருந்து எழுந்து நின்ற இந்திரன் தனது அலைபேசியை எடுத்து அன்னையின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பு சென்று கொண்டிருந்த வேளையில் வீட்டு வாசலில் கார் வந்து நிற்க, அழைப்பைத் துண்டித்து விட்டு வாசலைப் பார்த்தான். தாயும் தந்தையும் தான் காரில் வந்து இறங்கினார்கள். ஹாலில் மகன் நின்று இருப்பது தெரிய, மனைவியை ஒரு பார்வைப் பார்த்த தயாநிதி வீட்டினுள் சென்றார்.
கணவனின் பின்னாடியே தலை குனிந்தபடி வீட்டிற்குள் வந்த லட்சுமி மகனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு சமையலறைக்குள் நுழையப் போக, தயாநிதியும் அமைதியாக அவரது அறையை நோக்கிப் போக போனார்.
இருவரின் முகமும் சரியில்லை என்பதைப் பார்த்த நொடியிலேயே கண்டுகொண்ட இந்திரன், “நில்லுங்க..” என்றான்.
இருவரும் நின்று மகனைத் திரும்பிப் பார்க்க, “இரண்டு பேர் முகமும் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என்று வினாவினான்.
“அது.. அது.. வெளியே வெயில் ஜாஸ்தி..” என்று தயாநிதி சொல்ல,
“வெயில்ல எங்க போயிட்டு வரீங்க?” என்று உடனே அடுத்த கேள்வியைக் கேட்டான் இந்திரன்.
இந்த முறை கணவனை முந்திக் கொண்டு “கோ..கோவிலுக்குப் போ..யிட்டு வரோம்ப்பா” என்று லட்சுமி சொல்ல,
அதில் பதறிப் போன தயாநிதி, “அப்பப்பா.. இதென்ன வீடா? இல்ல, கோர்ட்டா? கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வந்ததுக்கு எத்தனை கேள்வி..” என படபடவென பொறிந்து தள்ளியவர் மனைவியைப் பார்த்து “நீ ஏன்டி நிக்குற? போ.. போய் சூடா டீ போட்டு எடுத்துட்டு வா” என்று எரிந்து விழுந்து விட்டு அவரது அலுவலக அறைக்குச் சென்றார்.
இந்திரன் தாயைப் பார்க்க, அவர் அவனது பார்வையைத் தவிர்த்து விட்டு சமையலறைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றார். அதிலேயே அவனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
தனது அறைக்குச் செல்லாமல் ஹால் சோஃபாவிலேயே இறுக்கமான முகத்துடன் அமர்ந்து விட, சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்த லட்சுமி முந்தாணையால் வாயை மூடிக் கொண்டு கண்ணீர் விட்டார்.
பல வருடங்கள் தவமாய் தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளை என்பதாலேயே, மகன் ஆசைப்பட்டு கேட்ட எதையும் அவர்கள் இதுநாள் வரை மறுத்து கூறியதே இல்லை. கேட்டது கேட்காதது எல்லாமே மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகுப் பார்த்தார்கள்.
இப்போது கூட மகன் ஆசைப்பட்டு விட்டான் என்ற ஒரு காரணத்தாலேயே சம்பந்தம் பேச சென்றார்கள். ஆனால் போன இடத்தில் இப்படி அசிங்கப்பட்டுத் திரும்ப வந்து இருக்கிறார்கள் என்று அவன் அறிந்தால், மொத்தமாக நொருங்கிப் போய் விடுவான் என்பதாலேயே தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை மூடி மறைக்கிறார்கள்.
அவன் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருக்க, லட்சுமி கணவனுக்கு தேநீர் போட்டு எடுத்துக் கொண்டு மகனைக் கடந்து அலுவலக அறைக்குச் சென்றார்.
“அவன் என்னடி பண்றான்? போயிட்டானா?” என்று தயாநிதி கேட்க,
“இல்லங்க.. சோஃபாவுல தான் உட்கார்ந்து இருக்கான்” என்றார்.
“அவனுக்கு சந்தேகம் வந்துருச்சு.. சும்மா இருக்க மாட்டான்.. அப்புறமா உங்கிட்ட வந்து பேச்சு கொடுப்பான்.. ஜாக்கிரதையா இரு. வார்த்தையை விட்டுடாதே.. அவன் ரொம்ப ஃபீல் பண்ணுவான்” என்று சொல்ல, லட்சுமிக்குச் சட்டென கண்கள் கலங்கிப் போனது.
தயாநிதிக்கும் கஷ்டமாகத் தான் இருக்கிறது. சாதாரணமாக பெண் கேட்டு வந்தவர்களை இத்தனை தூரம் அவமானப்படுத்தி அனுப்பி இருக்க தேவையில்லை என்பதே அவருடைய வருத்தம்.
********
அன்று மாலை வசுமதி அம்மாவுடன் அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வர, திருநீலகண்டன் இறுகிய முகத்துடன் ஹால் சோஃபாவில் அமர்ந்து இருந்தார்.
நேரே தந்தையிடம் வந்த சித்ரா, “அப்பா.. சாப்பிட்டு மாத்திரை போட்டீங்களா?” என்று கேட்க, அவர் வெறும் தலையை மட்டும் அசைத்தார். இது சித்ரா தினமும் அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுமே தந்தையைப் பார்த்துக் கேட்கும் கேள்வி தான்.
பின்னர், மகளைப் பார்த்த சித்ரா, “வசு.. கவர்மெண்ட் டென்டருக்கு கொட்டேஷன் ரெடி பண்ணனும். நீ போய் அந்த வேலையைப் பார்” என்றார்.
அதற்கு சரி என்பது போல தலையை அசைத்து விட்டு அவள் செல்ல, திருநீலகண்டனின் அழுத்தமான பார்வை அவளைப் பின்தொடர்ந்தது.
அந்நேரம் பார்த்து மதுமதி வீட்டிற்குள் நுழைய, “எங்கடி போயிட்டு வர்ற?” என்று கேட்டார் சித்ரா.
“பர்சேஸ் பண்ணப் போனேன்”
“நான் உங்கிட்ட என்ன சொல்லிட்டுப் போனேன்.. வீட்டுல தாத்தா தனியா இருப்பார். அவருக்கு நேரத்துக்கு சாப்பாடும் மாத்திரையும் எடுத்துக் கொடுன்னு தானே சொல்லிட்டு போனேன்” என்று சித்ரா கேட்க, தாய்க்கும் மகளுக்கும் அங்கேயே வாக்குவாதம் ஆகி விட்டது.
அதில் கடுப்பாகிப் போன திருநீலகண்டன், “அங்க என்ன தொண தொணன்னு பேச்சு?” என்று எரிச்சலாகக் கத்த, மதுமதி பயத்தில் விரிந்த பார்வையுடன் தாயின் பின்னால் மறைந்து கொண்டு தாத்தாவை எட்டிப் பார்த்தாள்.
“இரண்டு பேரும் போங்க இங்கிருந்து?” என்று அவர் கூற, இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.
“என்னம்மா.. தாத்தா இன்னைக்கு பயங்கர கோபத்துல இருக்கார். நீங்க எதுவும் தப்பு பண்ணிட்டீங்களா?” மதுமதி தாயைப் பார்த்து வினவ, சித்ரா மகளை முறைத்துப் பார்த்தார்.
“எதுவா இருந்தாலும் சொல்லும்மா.. நான் தாத்தாவை சமாளிச்சிக்கிறேன்” என்று அவள் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி குறும்பாய் கூற,
அவளின் காதைப் பிடித்து திருகிய சித்ரா, “ஏன்டி அறுந்த வாலு.. அடங்கவே மாட்டியா நீ?” என்று பல்லைக் கடித்தார்.
“ஆஆஆ.. விடும்மா.. வலிக்குது..” என்ற மதுமதி தாயிடமிருந்து விலகி தனது அறைக்கு ஓட, சித்ரா தந்தையைத் திரும்பிப் பார்த்தார். அப்போதும் அவரது முகம் கடுகடுவென தான் இருந்தது.
அன்றிரவு டைனிங் ஹாலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் திருநீலகண்டன் தனது தொண்டையைச் செரும, மூவரும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்கள்.
அவர் வசுமதியை மட்டும் அழுத்தமாகப் பார்த்து, “நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று சொல்ல, அவளது முகம் பேயறைந்தது போல் ஆனது.
“எ..ன்ன தாத்தா.. திடீர்னு..” என்று கேட்டவளுக்கு குரலே எழாமல் போக,
அவர் அவளை அழுத்தமாகப் பார்த்து “ஏன்? நீ யாரையும் மனசுல நினைச்சிட்டு இருக்கீயா?” என்று கேட்டார்.
அவர் கேட்ட தோரணையில் அவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போக, முகம் வியர்த்துப் போனது.
“ஐயோ! தாத்தா.. இவளா? சரியான படிப்ஸ்.. காலேஜ், ஹாஸ்டல், லைப்ரரியை விட்டா வேற எதுவும் தெரியாது” என மதுமதி அக்காவை முந்திக் கொண்டு தாத்தாவிடம் சொல்ல, அவளை ஒரு பார்வைப் பார்த்தவர் மீண்டும் வசுமதியை ஆழ்ந்து நோக்கினார். அவருக்கு அவளது வாயில் இருந்து பதில் வர வேண்டி இருந்தது.
“இ..இப்போ தானே தாத்தா நான் பிஸினஸ் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சி இருக்கேன்.. அதுக்குள்ள கல்யாணம்..” என்று தயக்கமாக இழுக்க,
“கல்யாணத்துக்கு அப்புறமும் கூட நீ பிஸினஸை பார்த்துக்கலாமே.. யார் வேண்டாம்ன்னு சொல்லப் போறா” என்றார்.
“அதுக்கு இல்ல தாத்தா..” என்று அவள் எதையோ கூறப் போக,
“வசுமதி.. என்ன பழக்கம் இது.. பெரியவங்கக்கிட்ட கூட கூட பேசுறது” என்று அதட்டினார் சித்ரா.
அவள் அமைதியாக தலை குனிந்து கொள்ள, மதுமதி தொடர்ந்தாள். “அம்மா.. அக்கா தான் பிஸினஸ் பார்க்கனும்ன்னு சொல்றா இல்ல.. அவளை ஏன் கட்டாயப்படுத்துறீங்க? பேசாம வர்ற மாப்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கவா?” என்று அவள் கிண்டலாக ஒற்றைக் கண்ணடித்துக் கூற,
“செருப்பு பிஞ்சிரும்..” என ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தார் சித்ரா.
அதில் அதிர்ந்த மதுமதி எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி தாயைப் பார்க்க, அவளது தாத்தாவோ “சொல்லாதே.. செஞ்சிரு..” என்று கூறி விட்டு தட்டிலேயே கையைக் கழுவிக் கொண்டு சென்றார்.
மதுமதி பயத்துடன் அன்னையைத் திரும்பிப் பார்க்க, அவர் அவளைக் கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்து கொண்டிருந்தார்.
“நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்..” அவள் தலை குனிந்து கொண்டே மெல்லிய குரலில் கூற, தன்னுடைய தட்டை எடுத்துக் கொண்டே எழுந்த சித்ரா சின்ன மகளது தட்டையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
“அ..ம்மா நான் இன்னும் சாப்பிடவே இல்ல..” என கெஞ்சிக் கொண்டே அவள் தாயின் பின்னாடி செல்ல, குனிந்து இருந்த வசுமதியின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளி வெளியேறி அவள் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் விழுந்து தெறித்தது.
உடனே தட்டில் கைக்கழுவிக் கொண்டு விடுவிடுவென மாடிப்படியில் ஏறி தனது அறைக்குச் சென்றவள் கதவை அடைத்து தாழ்பாள் போட்டு விட்டு அலைபேசியைக் கையில் எடுத்தாள். வேகமாக சில எண்களை அழுத்தி விட்டு அலைபேசியைக் காதில் வைக்க, மறுமுனையில் அழைப்பு சென்று கொண்டே இருந்தது.
முழு ரிங்கும் சென்று முடிய, அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப்படவே இல்லை. அதில் ஆத்திரம் கொண்டவள், வாய்க்குள்ளேயே கண்டபடி திட்டிக் கொண்டு அடுத்த அழைப்பை விடுத்தாள். அதுவும் ஏற்கப்படவில்லை என்ற உடன் கையில் இருந்த அலைபேசியை கோபத்துடன் தூக்கி எரிய, அது சுவரில் பட்டு துண்டு துண்டாக தரையில் சிதறி விழுந்தது.
அடுத்த நாள் வசுமதி விருப்பமே இல்லாமல் தயாராகி அவளது அறையில் அமர்ந்து இருக்க, மதுமதி வரப் போகும் மாப்பிள்ளை வீட்டாருக்காக ஆர்வத்துடன் ஜன்னலில் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது கையில் மல்லிப்பூ சரத்தை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த சித்ரா, “ஏய்.. அங்க என்னடி பார்த்துட்டு இருக்க?” என்று சின்னவளைப் பார்த்து வினவ,
“இஸ்ரோ இன்னைக்கு காலையில ஒரு ராக்கெட் லான்ஞ் பண்ணாங்க இல்லம்மா. அது நம்ம வீட்டு வழியா தான் போகும்ன்னு சொல்லி இருந்தாங்க. அதான் எந்தப் பக்கம் போகுதுன்னு பார்த்துட்டு இருக்கேன்” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகச் சொல்லி அன்னையின் முறைப்பைப் பரிசாகப் பெற்றாள்.
“சரி சரி.. முறைக்காதே.. மாப்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கன்னு நேத்து சொன்னீங்கல்ல.. அவங்க தான் வர்றாங்களான்னு பார்த்துட்டு இருக்கேன்” என்று சொல்ல,
“மாப்ளை வீட்டுக்காரங்க வர்றதுல உனக்கு என்னடி அத்தனை ஆர்வம்?” என மகளைக் குறுகுறுவென பார்த்துக் கொண்டே கேட்டார் சித்ரா.
“ம்.. அதுவா.. அது..” என தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆய்த்தமானவள் மிக ஜாக்கிரதையாக அறைக் கதவு வரை சென்று நின்று கொண்டு “மாப்ளை நல்லா இருந்தா நானே கட்டிக்கலாம்ன்னு தான்..” என்று குறும்பாகக் கூறி விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
“என்னது..” என விழி விரித்த சித்ரா, “அடியேய்.. வர வர உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிட்டே போகுது..” என்று சின்ன மகள் ஓடிய திசையைப் பார்த்து கத்தி விட்டு திரும்பி பெரிய மகளைப் பார்த்தார்.
பட்டுப்புடவை அணிந்து இருந்தவளின் முகத்தில் துளி புன்னகை இல்லாமல் இருக்க, அவள் அருகே வந்து நின்று தலையில் பூ வைத்து விட்டார்.
அத்துடன் மகளின் நாடியைப் பிடித்து தன் முகத்தைப் பார்க்கச் செய்தவர், “என்ன..” என்று மென்மையான குரலில் கேட்க, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை அன்னையிடம் சொல்லி விடலாம் என்று எண்ணி அவள் வாயைத் திறந்த கணம், ஹார்ன் சத்தத்துடன் வரிசையாக நான்கைந்து கார் வந்து வீட்டு வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது.
“மாப்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல..” என்ற சித்ரா மகளை மறந்தவராக பதற்றத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டார்.
தன் மகளைப் பெண் பார்க்க வந்த புவியரசன் குடும்பத்தை, “வாங்க.. வாங்க..” என புன்னகை முகமாக வரவேற்று ஹாலில் அமர வைத்தார் சித்ரா.
சிவப்பிரகாசமும் ரங்கநாயகியும் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, தம்பிக்கு அருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தார் ஞானப்பிரகாசம். சாகரன், ஆதவன், வசந்தன், ககன் ஆகியோர் எதிர் இருக்கையில் வரிசையாக அமர்ந்தனர்.
ஆக, புவியரசனைத் தவிர அனைவரும் பெண்ணைப் பார்க்க வந்து விட்டார்கள். இவர்களை எல்லாம் மாடி ஹாலில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த மதுமதி, “என்ன.. நாலு பேர் வந்து இருக்காங்க. இவங்கல்ல யாரு மாப்பிள்ளைன்னு நாம எப்படி தெரிஞ்சிக்கிறது” என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
பின்னர், அவள் மெதுவாக படியில் இறங்கி வரவும் வசந்தனின் அலைபேசி அலறவும் நேரம் சரியாக இருந்தது. அவன் அலைபேசியை கையில் எடுத்து கொண்டு தனியே வந்து நிற்க, அவள் அவன் பின்னாடியே ஓடினாள்.
அவன் ஃபோன் பேசி கொண்டிருந்த போது மதுமதி அவனை சைகையில் அழைக்க, வசந்தன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தன் போக்கில் நண்பனுடன் கதைப் பேசிக் கொண்டு இருந்தவனின் முதுகில் ஒரு பிளாஸ்டிக் பூ சென்ட் பட்டு கீழே விழ, அவன் யாரென்று திரும்பி பார்த்தான்.
அதை அவன் மேல் தூக்கி வீசிய மதுமதி, அவனைப் பார்த்து புன்னகை புரிய, அவன் அழைப்பைத் துண்டித்து விட்டு ‘என்ன’ என்பது போல அவளைப் பார்த்தான்.
“சார் பேர் என்ன?” என்று அவள் கேட்க,
“இதைக் கேட்கத் தான் பூவைத் தூக்கி என் மேல போட்டீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் வசந்தன்.
“அதுக்கு கூப்பிடல.. நாலு பேரு வந்து இருக்கீங்களே.. இதுல யாரு மாப்ளைன்னு தெரிஞ்சிக்க தான் கூப்டேன்” என்றவள் மற்ற மூவரைப் பார்வையிட, அவனது இதழ்களில் குறும்பு புன்னகை அரும்பின.
அதை உணராதவளோ, “மாப்ள யாரு?” என்று உதட்டில் விரல் வைத்து ஆராய,
சடாரென “நான் தான்” என்றான் வசந்தன்.
அதிர்ச்சியும் திகைப்புமாக அவனைத் திரும்பிப் பார்த்த மதுமதி, “நீயா..” என்றாள்.
அவளது பார்வையைக் கண்டு தனது சட்டையைச் சரி செய்துக் கொண்டவன் “ஏன்? என்னைப் பார்த்தா மாப்ள மாதிரி தெரியலையா?” என்று சிரிப்புடன் கேட்க, அவள் முகம் அஷ்ட கோணலாகி போனது.
“ஆமா நீங்க யாரு?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க,
“ம்.. வேலைக்காரி” என்றாள் கடுப்பாக.
“வேலைக்காரியா.. பார்த்தா அப்படி தெரியலையே.. நல்லா காஸ்லியான டிரஸ் எல்லாம் போட்டு இருக்கீங்க?”
“இதெல்லாம் முதலாளி அம்மாவோட பழைய டிரஸ்ங்க..” என்று அவள் நெளிந்து கொண்டே சொல்ல,
“ஓ.. நான் கூட நீங்க பொண்ணோட தங்கச்சியா இருப்பீங்கன்னு நினைச்சேன்..” என்றான்.
மதுமதி அதிர்ந்து பார்க்க, அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அக்கா-தங்கையின் புகைப்படத்தைக் கட்டை விரலால் சுட்டிக் காட்டினான் வசந்தன். அதில் மாட்டிக்கொண்ட உணர்வுடன் அசடு வழிந்தவள், அங்கே நிற்க முடியாமல் சிட்டாய்ப் பறந்துவிட, வசந்தனின் இதழ்கள் சிரிப்பில் இன்னும் பெரியதாக விரிந்தன.
அப்போது தனது அறையில் இருந்து வெளியே வந்த திருநீலகண்டன், சோஃபாவில் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு பக்கவாட்டாகத் திரும்பி ஞானப்பிரகாசத்தை நோக்கி புன்னகைத்தார்.
“ஞானம்.. எப்படிப்பா இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்று நலம் விசாரிக்க,
“எல்லா இருக்கேன் சித்தப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று அவர் பதிலுக்கு நலம் விசாரித்த போது தான், வந்து இருப்பவர்கள் அவர்களது உறவினர்கள் என்று சித்ராவுக்கே விளங்கியது.
“என்னம்மா தங்கச்சி.. அப்படி பார்க்குற? எங்களை ஞாபகம் இல்லையா?” என்று ஞானப்பிரகாசம் கேட்க, சித்ரா குத்து மதிப்பாய் தலை அசைத்து வைத்தார்.
“சின்ன வயசுல உங்களைப் பார்த்தது.. அதுக்கு அப்புறம் இப்போ தானே பார்க்குறா.. மறந்து இருப்பா” என்ற திருநீலகண்டன் ஞானப்பிரகாசத்தின் அப்பா தனக்கு ஒன்று விட்ட அண்ணன் என்ற உறவு முறையை மகளுக்குக் கூறினார்.
அவளைப் பார்த்து புன்னகைத்த ஞானம், தனது தம்பியைக் கைக்காட்டி, “இவன் என் தம்பி.. சிவப்பிரகாசம், அது அவன் மனைவி ரங்கநாயகி” என்று அறிமுகம் செய்து வைக்க, சித்ரா அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.
“அவங்க நாலு பேரும் என் தம்பி பசங்க.. இவன் சாகரன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கம்பெனி வச்சி இருக்கான். அடுத்து இருக்குறவன் ஆதவன், இப்போ தான் காலேஜ் முடிச்சி இருக்கான். அது வசந்தன், அடுத்தவன் ககன். இரண்டு பேரும் காலேஜ்க்குப் போறாங்க” என்று ஞானம் சொல்ல,
“அப்போ இவர் தான் மாப்பிள்ளையா?” என்று சாகரனைப் பார்த்துக் கேட்டார் சித்ரா.
அதைக் கேட்டுச் சிரித்த திருநீலகண்டன், “மாப்பிள்ளை இவன் இல்லை. இவங்க அண்ணன் புவியரசன். இப்போ ஆளுங்கட்சி எம்.பி.யா இருக்கான்” என்று கூற, மதுமதி வசந்தனை முறைத்துப் பார்த்தாள்.
அவனுக்குச் சிரிப்பு அடக்க முடியாமல் போக, வாயை மூடி சிரித்தான். அவனுக்கு அருகில் இருந்த ஆதவன் அதைப் பார்த்து விட்டு, “அந்தப் பொண்ணு ஏன்டா உன்னைப் பார்த்து முறைச்சிட்டு இருக்குது?” என்று வினவ,
“அதுவா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கிட்ட வந்து நம்மல்ல யாரு மாப்ளைன்னு கேட்டாங்க. நான் தான் மாப்ளைன்னு சொல்லி இருந்தேன். இப்போ நான் மாப்ளை இல்லைன்னு தெரிஞ்சி முறைக்குறாங்க..” என்று சிரிப்பின் ஊடே மெல்லியக் குரலில் கூறினான் வசந்தன்.
இப்போது ஆதவனின் பார்வை மதுமதி மீது பதிய, அவள் வசந்தனை முறைத்துக் கொண்டே ‘ஃப்ராடு’ என திட்டினாள். அதைக் கண்டு ஆதவனுக்குமே சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர, ஒரு கையால் வாயை மூடிச் சிரித்தான்.
“ஆமா.. மாப்ளை ஏன் வரல?” என்று திருநீலகண்டன் வினவ,
“திடீர்னு ஒரு எமர்ஜென்சி கால் வந்துச்சுன்னு கிளம்பிப் போயிட்டான்” என்ற ஞானப்பிரகாசத்தின் பார்வை சித்ராவின் அருகில் நின்று இருந்த மதுமதியின் மேல் பதிந்தது.
அதைப் பார்த்த சித்ரா, “இவ என் இரண்டாவது பொண்ணு.. பேரு மதுமதி. இப்போ தான் யுஜி முடிச்சி இருக்கா” என்று அறிமுகம் செய்து வைக்க, அவள் புன்னகையுடன் அவரைப் பார்த்து கையெடுத்து வணங்கினாள்.
அப்போது மகளைத் திரும்பிப் பார்த்த திருநீலகண்டன், “வசுமதியை அழைச்சிட்டு வா..” என்று சொல்ல, ‘சரி’ என்பது போல தலை அசைத்து விட்டு மாடிப்படியில் ஏறி சென்ற சித்ரா வசுமதியை அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.
கடனே என குனிந்த தலை நிமிராமல் தாயுடன் நடந்து வந்த வசுமதி வந்தவர்களை வணங்க, எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். பின்னர் அவளிடம் காஃபியை கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கச் சொல்ல, அதையும் செய்து விட்டு ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்த ஞானப்பிரகாசம் பக்கவாட்டாகத் திரும்பி தம்பியைப் பார்க்க, அவரும் திருப்தியுடன் அண்ணனைப் பார்த்து புன்னகைத்தார். அதிலேயே அவருக்கு பெண்ணைப் பிடித்துப் போய் விட்டது என்று தெரிந்து கொண்ட ஞானப்பிரகாசம் எட்டி தம்பி மனைவியைப் பார்க்க, அவர் வசுமதியைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
‘என்னடா இது’ என்பது போல் அவர் தம்பியைப் பார்க்க, மனைவியின் தோளை இடித்த சிவப்பிரகாசம் அண்ணனைப் பார்வையால் சுட்டிக் காட்டினார்.
“என்னம்மா.. உனக்கு பொண்ணைப் பிடிச்சி இருக்கா?” என்று ஞானப்பிரகாசம் மெல்லியக் குரலில் வினவ,
“பிடிக்கலன்னு சொன்னா, பெரியவனுக்கு என் அண்ணன் பொண்ணை கட்டி வச்சிடுவீங்களா?” என்று அவரைப் போலவே மெல்லியக் குரலில் கேட்டு விட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் ரங்கநாயகி.
“நானாம்மா மாட்டேங்குறேன். உன் பையன் அன்னைக்குப் பேசுன பேச்சை நீயே கேட்ட தானே. அவன் பிடிவாதமா முடியாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் தானே நான் அவனுக்கு பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சேன்” என்று நிதானமாக எடுத்துச் சொல்ல, அவரும் வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டி வைத்தார்.
அவரது சம்மதமும் கிடைத்தப் பிறகே திருநீலகண்டனைத் திரும்பிப் பார்த்த ஞானப்பிரகாசம், “எங்க எல்லாருக்கும் பொண்ணைப் பிடிச்சி இருக்கு சித்தப்பா” என்றார்.
“அப்புறம் என்ன.. இப்போவே தட்டை மாத்திக்கலாம்..” என்று அவர் சொல்ல,
“ஆன்.. அதெப்படி? மாப்ளையோட ஃபோட்டோவை கூட நீங்க காட்டல. எங்க அக்காவோட சம்மதத்தையும் கேட்கல.. நீங்களா வந்து காஃபியை மட்டும் குடிச்சிட்டு கல்யாணத்தை முடிவு பண்றீங்களே.. இதென்ன நியாயம்?” என்று இடையில் புகுந்து படபடவெனப் பொறிந்து தள்ளி விட்டாள் மதுமதி.
திருநீலகண்டன் தனது மகளை முறைத்துப் பார்க்க, அவர் சின்ன மகளின் கையைப் பிடித்து இரண்டடி பின்னால் இழுத்துச் சென்று, “ஏய் முந்திரி கொட்டை.. பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது” என்று அடிக்குரலில் சீறினார்.
“அம்மா.. நான் என்ன தப்பா கேட்டுட்டேன்..” அவள் தாயிடம் வாக்குவாதம் செய்ய,
“தங்கச்சிம்மா விடு. அந்தப் புள்ள கேட்குறதும் நியாயம் தானே. நாமளா பேசி முடிவு பண்ணிக்கிட்டா எப்படி? இது கல்யாண விஷயம். கட்டிக்கப் போறங்களையும் ஒரு வார்த்தை கேட்டுக்குறது நல்லது தானே..” என்ற ஞானப்பிரகாசம், சாகரனைப் பார்த்து
“பெரியவனுக்கு வீடியோ கால் பண்ணு” என்றார்.
“சரி பெரியப்பா..” என்றவன் புவியரசனுக்கு அழைப்பு விடுக்க,
அந்தப் பக்கம் ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் ஒருவனைக் கட்டி வைத்து இரத்தம் சொட்டச் சொட்ட இரும்பு ராடால் அடி வெளுத்துக் கொண்டு இருந்தவன் தனக்கு எதிரே குத்துயிரும் கொலையுயிருமாக இருந்தவனைப் பார்த்து “என் கண்ணுல படாம ஓடி போயிட்டா, உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சியாடா?” என்று கேட்க,
அவன் ‘இல்ல’ என்பது போல தலை அசைத்தான். அதற்கு கூட அவனுக்கு தெம்பில்லை.
மீண்டும் அவனை அடிக்க புவியரசன் இரும்பு ராடை ஓங்கிய சமயம் அவனது பாக்கெட்டில் இருந்த அலைபேசி அலறியது. அதில் ஓங்கிய ராடை கீழே போட்டவன், அலைபேசியில் யாரென்று பார்த்தான்.
சாகரனின் பெயரை திரையில் கண்டவன், சற்று தள்ளி வந்து நின்று அழைப்பை ஏற்று “என்னடா..” என்றான்.
“சாகரா.. ஃபோனை எங்கிட்ட கொடு” என்று ஞானப்பிரகாசம் கேட்க, அவன் அலைபேசியை அவரிடம் கொடுத்தான்.
அதுவரை அலட்சியமாக இருந்தவன், பெரியப்பாவின் முகத்தை அலைபேசியில் கண்டதும் தன் முகத்தை மாற்றிக் கொண்டு “சொல்லுங்க பெரியப்பா..” என்றான் மரியாதையாக.
“புவி.. நாங்க எல்லாரும் பொண்ணைப் பார்த்துட்டோம். எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்தவன்,
“அப்புறம் என்ன.. பேசி முடிச்சிட வேண்டியது தானே..” என்றான் தடாலடியாக.
“அதெப்படிப்பா.. நீ இன்னும் பொண்ணைப் பார்க்கலையே”
“நான் பார்க்கனும்ன்னு அவசியம் இல்லை. உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும். பேசி முடிச்சிடுங்க” என்று சொன்னவன் அழைப்பைத் துண்டித்து விட, ஞானப்பிரகாசத்தின் முகம் பெருமையில் மிளிர்ந்தது.
“பெரியவனுக்கு அண்ணன்ன்னா உயிர். அவர் எது சொன்னாலும் தட்டாம கேட்பான்” என்று சிவப்பிரகாசம் சொல்ல, ‘க்கும்’ என மனதிற்குள் நொடித்துக் கொண்டார் ரங்கநாயகி.
“என் பேத்தியும் அப்படி தான். என் பேச்சை என்னைக்குமே மீற மாட்டா”
திருநீலகண்டன் வசுமதியைப் பார்த்துக் கொண்டே அந்த வார்த்தைகளைச் சொல்ல, அவரது பேச்சைக் கேட்டு விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள் தாத்தாவின் துளைத்தெடுக்கும் பார்வையை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
“அப்புறம் என்ன.. இப்போவே தட்டை மாத்திக்கலாம்” என்று ஞானப்பிரகாசம் கூற, இருக்கையில் இருந்து எழுந்து நின்ற சிவப்பிரகாசம் திரும்பி அசையாமல் அமர்ந்து இருந்த மனைவியை முறைத்துப் பார்த்தார்.
அவர் வேண்டா வெறுப்பாக எழுந்து நிற்க, சிவப்பிரகாசம் வெற்றிலைப் பாக்கு தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு திருநீலகண்டத்தைப் பார்த்தார். எழுந்து நின்று அந்த தாம்பூலத் தட்டை வாங்கிக் கொண்டவர், திரும்பி மகளிடம் அதனைக் கொடுத்து விட்டு அமர்ந்து திருமணப் பேச்சைத் தொடர்ந்தார்.
“ஞானம்.. கல்யாணத்தை அடுத்த மாசமே வச்சிக்கலாம்” என்று அவர் சொல்ல,
“அடுத்த மாசமா? ஏன் சித்தப்பா அவ்ளோ சீக்கிரம்?” என்று கேட்டார்.
“அது.. என் பேத்தி ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர் அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடனும்ன்னு சொல்லிட்டார். இதை விட்டுட்டா அடுத்து அவளுக்கு கல்யாணம் கைக்கூடி வர்றதுல நிறைய தடங்கல் வரும்ன்னு வேற சொல்லி இருக்கார். அதுதான்ப்பா அடுத்த மாசமே கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு பார்க்கிறேன்” என்று ஜோசியர் மீது பழி போட,
யோசனையாக தம்பியைத் திரும்பிப் பார்த்த ஞானப்பிரகாசம், “நீ என்ன சிவம் சொல்ற?” என்று வினவினார்.
என்ன தான் தம்பியும் அவனது மகனும் தன் பேச்சைத் தட்டாமல் கேட்பார்கள் என்றாலும், எதிலும் தன்னிச்சையாக முடிவு எடுத்து விட்டு அதனை அவர்கள் மீது திணிக்கவே மாட்டார். எல்லாவற்றிலும் அவர்களின் விருப்பம் அறிந்தே முடிவு எடுப்பார்.
“என்னண்ணே என்னை கேட்டுட்டு இருக்க.. எப்பவும் நீ சொல்றது தான் இறுதி முடிவு..” என்று அவர் சொல்லி விட,
சாகரனை நோக்கிய ஞானப்பிரகாசம், “உன் அண்ணனுக்கு ஃபோன் போட்டு அடுத்த மாசம் கல்யாணத்தை வச்சிக்கலாமான்னு கேளு” என்றார்.
அமைச்சர் ஆயிற்றே.. ஆயிரம் வேலைகள் இருக்கும் அல்லவா?
அண்ணனிடம் பேசி விட்டு அங்கே வந்தவன், “பெரியப்பா அண்ணாவுக்கு ஓகேவாம்” என்றான்.
உடனே திருமண நாள் குறிக்கப்பட்டு, மண்டபத்தையும் புக் செய்து விட்டார்கள். அமைச்சர் கல்யாணத்திற்கு மண்டபம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
“ஞானம்.. எனக்குத் தெரிஞ்ச ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்னு இருக்கு. நான் அவங்கக்கிட்ட பேசிடுறேன்” என்று திருநீலகண்டன் சொல்ல,
“சரிங்க சித்தப்பா.. அப்போ நாங்க புறப்படுறோம். ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க. எல்லாருக்கும் ஜவுளி எடுக்கப் போலாம்” என்றவர் திரும்பி தனது குடும்பத்தினரைப் பார்க்க, அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்கள்.
“ஆகட்டும்ப்பா..” என்றவாறே திருநீலகண்டன் தனது இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, எல்லோரும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் வேகமாக தனது அறைக்கு ஓடிய வசுமதி பொத்தென படுக்கையில் விழுந்தாள். தலையணையில் முகம் புதைத்து கொண்டவளுக்கு அவ்வளவு நேரமும் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல வெளிவந்தது.
கீழே சிலையென நின்று இருந்த மதுமதியோ.. “என்னங்கடா இது.. அவங்களா வந்தாங்க. காஃபி குடிச்சாங்க. அஞ்சு நிமிஷம் பேசுனாங்க. அடுத்த மாசம் கல்யாணம்ன்னு முடிவே பண்ணிட்டு போயிட்டாங்க.. கல்யாணம் என்ன ஃபாஸ்ட் புட் அஹ் விட ஃபாஸ்ட்டா இருக்கு” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் வசுமதி வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகி கீழே இறங்கி வர, ஹாலில் திருநீலகண்டன் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அடியாள் போன்று தோற்றம் அளிக்க, அவர்களைப் புருவம் சுருக்கி பார்த்தவாறே படியில் இறங்கி வந்தாள்.
அப்போது தந்தைக்கு தேநீர் கொண்டு வந்த சித்ரா, “யாருப்பா இவங்க எல்லாம்?” என்று சாதாரணமாக வினவ,
“கல்யாணம் முடிவாயிடுச்சு இல்ல, நிறைய வேலை இருக்கும். அதுக்கு தான் வர வச்சி இருக்கேன்” என்றவர் அங்கிருந்த ஒரு வேலையாளை அழைத்து
“அவங்களை அழைச்சிட்டு போய் என்னென்ன வேலை இருக்குன்னு சொல்லு. அப்படியே அவங்க தங்குறதுக்கு இடத்தையும் காட்டு” என்றார்.
“சரிங்கய்யா..” என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் செல்ல,
“அம்மா.. போலாமா?” என தாயைப் பார்த்து வினவினாள் வசுமதி.
தேநீர் பருகிக் கொண்டிருந்த திருநீலகண்டன் நிதானமாக பேத்தியை ஏறிட்டு நோக்கி, “எங்க கிளம்பிட்ட?” என்று வினவ,
“இதென்ன கேள்வி தாத்தா.. ஆபீஸ்க்கு தான்” என்றாள்.
“எங்கேயும் போக தேவையில்லை. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு” என அவர் அதிரடியாகக் கூற, வசுமதி அதிர்ச்சியில் உறைந்தாள்.
“ஏன்?”
“அதான் கல்யாணம் முடிவாயிடுச்சு இல்ல. இனி நீ இந்த வீட்டை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது” என்றார்.
சட்டென தாயை நோக்கியவள், “அம்மா என்னம்மா இது?” என்று பல்லைக் கடிக்க, அவர் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
திருநீலகண்டன் தன் முடிவே இறுதி என்பது போல முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டிருக்க, “என்னப்பா இது.. கல்யாணத்துக்கு தான் இன்னும் ஒரு மாசம் இருக்கே. இப்போவே ஏன் இவளை ஆபீஸ்க்குப் போக வேண்டாம்ன்னு சொல்றீங்க?” என்று தன்மையாகக் கேட்டார்.
“எதை எப்போ செய்யனும்ன்னு எனக்குத் தெரியும். நான் உன்னைப் பெத்தவன். எனக்கே நீ பாடம் எடுக்க வேணாம்” என்று மகளைப் பார்த்து அவர் அழுத்தமாகச் சொல்ல, சித்ரா வாயை மூடிக் கொண்டார்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் தாத்தா.. சும்மா சும்மா எதையாவது சொல்லி கடுப்பேத்தாதீங்க. அம்மா நீ வா.. ஆபீஸ்க்குப் போலாம்” என்றவள் தாயின் கையைப் பற்றி இழுக்க, தந்தையின் அழுத்தமான முகத்தைப் பார்த்தவருக்கு ஏனோ அவரது பேச்சை மீறி செயல்படும் துணிவு வரவே இல்லை.
அசையாமல் நின்ற தாயின் கையைப் பற்றி இழுத்த வசுமதி “வாம்மா..” என்க, மகளிடம் இருந்து தன் கையை உருவிக் கொண்டு அமைதியாக நின்றார் சித்ரா.
“ஓ.. வர மாட்டியா.. இட்ஸ் ஓகே.. எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. நான் போறேன்” என்றவள் வாசலை நோக்கி நடக்க, திருநீலகண்டன் தனது ஊன்றுகோலில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.
உடனே ஒரு 4 பேர் ஓடி வந்து திருநீலகண்டனின் முன்பு நின்று, “என்னங்கய்யா கூப்டீங்களா?” என்று கேட்க,
வசுமதியைக் கைக்காட்டியவர், “இவ வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வச்சா, காலை உடைச்சி உள்ளே தூக்கிப் போடுங்க” என கட்டளை இட்டார்.
அதைக் கேட்டு ஆடிப் போன வசுமதி விழி விரித்து தாத்தாவைத் திரும்பிப் பார்க்க, அவர் “உள்ளே போ..” என்றார் இறுகிய குரலில்.
அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தாயை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தவள், கலங்கிய கண்களுடன் விறுவிறுவென மாடிப்படியில் ஏறி அவளது அறைக்குச் சென்றாள்.
அவள் சென்றதும் அடியாளை வெளியே காவலுக்கு நிற்க சொல்ல, அவர்களும் சென்று விட்டார்கள். இப்போது திருநீலகண்டனும் சித்ராவும் மட்டும் ஹாலில் தனித்து இருக்க, “என்னப்பா நடக்குது இங்க?” என்று கேட்டார் சித்ரா.
“ஒன்னும் இல்ல..”
“இல்ல, நீங்க எதையோ எங்கிட்ட இருந்து மறைக்குறீங்க” என்று சித்ரா சொல்ல, அவர் அமைதியாக இருந்தார்.
“சொல்லுங்கப்பா.. எங்கிட்ட இருந்து எதை மறைக்குறீங்க?”
சித்ரா பதற்றத்துடன் விடாமல் கேட்க, ஒரு பெருமூச்சை வெளியேற்றிய திருநீலகண்டன் தயாநிதி பெண் கேட்டு வந்த விஷயத்தைக் கூறினார்.
“என்ன தைரியம் இருந்தா, அவன் பையன் ஆசைப்பட்டுட்டான்னு நம்ம வீட்டு படி ஏறி வந்து பெண்ணு கேட்பான். இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா முடியட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு” என்று அடிக்குரலில் சீற்றத்துடன் உரைக்க, சித்ராவுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“என்னப்பா நீங்க.. யாரோ வந்து பொண்ணு கேட்டாங்கன்னு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?”
“அதுக்காக நான் இதெல்லாம் செய்யல. நிஜமாவே உன் பொண்ணு வசுமதி ஒரு பையனை காதலிக்குறா. அது தெரியுமா உனக்கு?” என்று கேட்க, சித்ரா அதிர்ச்சியோடு தந்தையைப் பார்த்தார்.
“இதுக்கே இவ்ளோ ஷாக் ஆகுறயே, அந்தப் பையன் யாருன்னு தெரிஞ்சா மயக்கமே போட்டுடுவ” என்றவர் வசுமதி காதலிக்கும் பையனைப் பற்றிய விபரங்களைக் கூற, நெஞ்சில் கை வைத்துக் கொண்டு இருக்கையில் ‘பொத்’ என அமர்ந்தார் சித்ரா.
“அக்கா இந்த புடவை எப்படி இருக்கு?” என ஒரு இளஞ்சிவப்பு நிற முகூர்த்தப் பட்டுப்புடவையை எடுத்துக் காட்டி வினாவினாள் மதுமதி.
விருப்பமில்லாத கல்யாண ஏற்பாட்டில் விதியே என விட்டேற்றியாக நாற்காலியில் அமர்ந்து இருந்த வசுமதி, தங்கையின் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“மதி.. அது வேண்டாம். இதை எடுத்துக்கலாம்” என வெளிர் நீல நிற பட்டுப்புடவையை எடுத்து காட்டினார் சித்ரா. தனக்கு எல்லாமே தெரியும் என்பதை மகள் முன்பு காட்டிக் கொள்ளாமல் கல்யாண வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்.
“அக்காவுக்கு பிங்க் கலர்ன்னா ரொம்ப பிடிக்குமேம்மா.. அதே கலர்ல புடவை எடுக்கலாமே..” என்று மதுமதி அடம் பிடிக்க,
“சொல்றேன்ல.. அதை கீழே வை. நாம இதை செலக்ட் பண்ணலாம்” என்றார் அழுத்தமாக.
“இல்ல, அக்காவுக்கு இந்த pink கலர் தான் பிடிக்கும்” மதுமதி தாயை முறைத்துக் கொண்டே கூற,
“ஏய் அது ரொம்பவே சிம்பிளா இருக்குடி. கல்யாணத்துக்கு இந்த மாதிரி கிராண்டா புடவை எடுத்தா தான் நல்லா இருக்கும்” என்றார் சித்ரா.
தாயும் மகளும் ஒருபக்கம் வாக்குவாதத்தில் ஈடுபட, ரங்கநாயகியோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் சற்று தள்ளி அமர்ந்து இருந்தார்.
அவருக்கு அருகில் இருந்த நீலவேணி, “இந்த கொடுமை எல்லாம் பார்க்க தான் என்னைய ஜவுளி எடுக்க கூப்டீங்களா அண்ணி.. இதுக்கு நீங்க என்னை கூப்பிடாமலேயே இருந்து இருக்கலாம்” என்று மனதாங்கலுடன் கூற,
“எனக்கு மட்டும் என்ன ஆசையா? விதியே இருக்கேன்..” என தன்னிலையை எண்ணி நொந்து கொண்டார் ரங்கநாயகி.
“வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணை உங்க மகனுக்கு கட்டுறேன்னு சொல்லிட்டு, இப்படி கடைசியில் பேச்சு மாறிட்டீங்களே அண்ணி.. இதை நான் உங்கக்கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கவே இல்ல” என்று நீலவேணி கேட்கவும் சட்டென ரங்கநாயகியின் கண்கள் கலங்கிப் போனது.
மேற்கொண்டு கல்யாண பேச்சை எடுத்தால் தாய்மாமன் குடும்பத்தையே கொளுத்தி விடுவேன் என்று மிரட்டிய மகனின் மிரட்டலுக்கு பயந்து இப்போது வரை வாயை மூடிக் கொண்டு அமைதி காக்கும் ரங்கநாயகி, “அது.. அது.. அவன் ஜாதகத்துல தோஷம் இருக்கு அண்ணி. அது தான் அவனுக்கு வெளியே பொண்ணு பார்த்து இருக்கோம்” என்று வாய்க்கு வந்ததைக் கூறி சமாளித்தார்.
“என்னவோ போங்கண்ணி..” என்ற நீலவேணி கடையைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க,
“அண்ணன் எதுவும் சொன்னாரா?” என்று தவிப்புடன் கேட்டார் ரங்கநாயகி.
“அவர் ஒன்னும் சொல்லல. அப்படியான்னு மட்டும் கேட்டுக்கிட்டார்” என்று பதில் வர, ரங்கநாயகியின் முகம் வாடிப் போனது.
அப்போது அங்கே வந்த சிவப்பிரகாசம், “என்ன.. எல்லாரும் சும்மா பார்த்துட்டே இருக்கீங்க.. சட்டுப்புட்டுன்னு துணி எடுத்துட்டு கிளம்புங்க.. அடுத்து நகைக்கடைக்கு வேற போகனும்” என்று சொல்ல,
“ஆன்.. கல்யாணப் பொண்ணுக்கு முகூர்த்தப் பட்டு எடுத்தாச்சுங்க சம்பந்தி. மாப்ளை வந்து ஒரு தடவை பார்த்துட்டா போதும்..” என்றார் சித்ரா.
“அவன் இதுக்கெல்லாம் வர மாட்டான் சம்பந்தி”
“ஏன்?”
“அதுக்கு ஏதுங்க அவனுக்கு நேரம்.. எப்போ பார்த்தாலும் கட்சி ஆபீஸ், தொகுதி, சட்டசபை, கூட்டம்ன்னு கிளம்பிடுவான். அவன் கல்யாணத்தன்னைக்கு வந்து உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுறதே பெருசுன்னா பார்த்துக்கோங்க. அதனால அவன் வருவான்னு எல்லாம் எதிர்ப்பார்க்காதீங்க. உங்களுக்குப் பிடிச்ச போல புடவையை எடுத்துட்டு கிளம்புங்க” என்றவர் மனைவியை ஏறிட்டு நோக்கி
“என்னடி ஆச்சா?” என்று குரல் கொடுக்க,
“ஆன்.. ஆச்சு ஆச்சு..” என ஒரு மாதிரி சலிப்பாக உரைத்த ரங்கநாயகி கடைக்காரப் பெண்ணிடம் “இதெல்லாம் பில் கவுண்டருக்கு அனுப்பிடும்மா” என்று தனக்கு முன்பு விரிக்கப்பட்டு இருந்த எல்லா புடவைகளையும் கைக்காட்டினார்.
அடுத்து நகைக்கடைக்குச் சென்றவர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப, மீண்டும் வசுமதி சிறை வைக்கப்பட்டாள்.
********
இதோ அதோவென்று இருந்த திருமண நாள் நாளை என்ற நிலையில் வந்து நிற்க, திருமண ஏற்பாடுகள் எல்லாம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விடிந்தால் திருமணம், மாலையில் ரிசப்ஷன் என்பதால், முதல் நாள் இரவே இரு வீட்டாரும் கிளம்பி திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அத்தனை நாளும் வசுமதி தப்பிக்க முயலவே இல்லை என்பதால் பாதுகாப்புக்கு இருந்த அடியாள்கள் எல்லாம் சற்று மெத்தன போக்கில் மண்டபத்தைச் சுற்றி உலா வர, அதற்காகவே காத்திருந்தவள் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு இரவோடு இரவாக மண்டபத்தை விட்டு ஓடி போய் விட்டாள்.
அதிகாலை வேளையில் பெண்ணின் அறைக்கு வந்த சித்ரா, அறை காலியாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
“வசு..” என்று அழைத்தவர் குளியலறைக் கதவைத் தட்ட, அது தானாக திறந்து கொண்டது.
“எங்க போனா இந்தப் பொண்ணு” என்று புலம்பியபடி திரும்பியவரின் பார்வையில் கட்டிலின் பக்கவாட்டாக இருந்த சிறிய மேஜையில் ஒரு வெள்ளைக் காகிதம் டம்ளர் ஒன்றின் கீழ் காற்றில் ஆடுவது தெரிய, அவரது இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டது.
முகம் குப்பென வியர்த்துப் போக, மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து சென்று நடுங்கும் கையால் அந்த காகிதத்தை எடுத்து பிரித்துப் பார்த்தார்.
அதில் ‘நான் வேறு ஒருத்தரைக் காதலிக்கிறேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை’ என்று வசுமதி எழுதி வைத்து இருப்பதைக் கண்டவர், உடைந்து போய் கட்டிலில் ‘பொத்’ என அமர்ந்தார்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாரோ தெரியவில்லை. கீழே புவியரசன் மணமேடைக்கு வந்து அமர்ந்த பின்பு, “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ..” என்று ஐயர் குரல் கொடுக்க, வெகு நேரமாக மகளைக் காணாமல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்த திருநீலகண்டன் மணப்பெண் அறைக்கே வந்துவிட்டார்.
“சித்ரா.. பொண்ணு ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே அவர் அறைக்குள் நுழைய,
உடனே கதவை அடைத்து விட்டு வந்தவர், “சித்ரா.. அழாதே.. என்னாச்சும்மா..” என்று கேட்க,
“இங்க பாருங்கப்பா..” என்றவர் தந்தையிடம் அந்த கடிதத்தை நீட்டினார்.
அதை வாங்கிப் படித்தவர் அடியாள்களை அழைத்து கண்ணா பின்னாவென்று திட்டி தீர்த்து விட்டார். “ஐயோ.. அப்பா.. அவங்களை விடுங்க. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்னப்பா பதில் சொல்ல போறோம்..” என்று சித்ரா பரிதவிப்புடன் கேட்க, அவருக்குமே அதற்கு பதில் தெரியவில்லை.
எவ்வளவு நேரம் தான் அப்படியே இருக்க முடியும்? நேரம் அதன் போக்கில் சென்றது. ஐயர், மீண்டும் ஒருமுறை பெண்ணை அழைத்து வரச் சொல்லி குரலும் கொடுத்து விட்டார்.
வெகு நேரமாக மணப்பெண்ணைக் காணவில்லையே என்று சந்தேகம் கொண்ட மாப்பிள்ளை வீட்டார் மணமகள் அறைக்கு வந்து கதவைத் தட்டினார்கள்.
“அப்பா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் கதவைத் தட்டுறாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா” என்று சித்ரா பயத்துடன் கூற,
“இரு.. எதையாவது சொல்லி சமாளிக்கலாம்..”
“எல்லா தெரிஞ்சி இருந்தும் என்னப்பா பேசுறீங்க.. சமாளிக்குறது எல்லாம் அந்தக் குடும்பத்துக்கிட்ட எடுபடுமா? கல்யாணம்ன்னு சொல்லி ஊரையே கூட்டிட்டு வந்து இருக்காங்க. சரியா முகூர்த்த நேரத்துக்கு சி.எம். வேற வர போறாராம். இப்போ போய் கல்யாணப் பொண்ணைக் காணோம்ன்னா, நம்ம குடும்பத்தையே பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவாங்கப்பா” என சித்ரா நடுநடுங்கிக் கொண்டிருந்த போதே, அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விட்டார்கள்.
சித்ராவும் திருநீலகண்டனும் திடுக்கிட்டுப் போய் அறை வாசலைப் பார்க்க, அங்கே தனது நான்கு தம்பிகளை விலக்கிக் கொண்டு இறுகிய முகத்துடன் நடுநாயகமாக வந்து நின்றான் புவியரசன்..
வெண்ணிற பட்டுவேட்டி, பட்டுச்சட்டையில் இருந்தவனின் கூர்மையானப் பார்வை அவர்களைத் துளைத்து எடுக்க, சித்ராவுக்கு சர்வமும் ஆடிப் போனது. அவனை இப்போது தான் நேரில் பார்க்கிறார் என்றாலுமே, அவனைப் பற்றி வெளியே அனைத்தும் விசாரித்து விட்டார்.
அறையைச் சுற்றி ஒரு பார்வைப் பார்த்த புவியரசன் அழுத்தமான அடியெடுத்து வைத்து அவர்களின் முன்னே சென்று நின்றான்.
“கல்யாணப் பொண்ணு எங்கே?” என்று இறுகிய குரலில் கேட்டவனின் பார்வை அவர்களைத் துளைத்தெடுக்க,
“அவ.. அவ.. ஓடி போயிட்டா” என்றார் சித்ரா.
“என்னது.. ஓடி போயிட்டாளா? என்னண்ணே இது.. என்ன சொல்றாங்க” என்று சிவப்பிரகாசம் தனது அண்ணனைப் பார்த்து பதற்றத்துடன் கேட்க,
திருநீலகண்டத்தைப் பார்த்தவர், “என்ன சித்தப்பா இதெல்லாம்.. கல்யாணப் பேச்சை எடுக்கும் போதே, பொண்ணுக்கு காதல் கீதல் எதுவும் இருக்கான்னு கேட்டேன் இல்ல, அப்போவே சொல்லி இருக்கலாமே..” என்று தவிப்புடன் கேட்டார்.
அவரைத் தொடர்ந்து இதுதான் சாக்கென்று நினைத்த ரங்கநாயகி, “சொந்தத்துல என் அண்ணன் பொண்ணு இருந்தும், தேடி வந்து உங்க பொண்ணை என் பையனுக்கு பேசுனோம் பாருங்க.. எங்களைச் சொல்லனும். இப்படி எங்க குடும்ப மானத்தை வாங்கனும்ன்னு எத்தனை நாளா கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தீங்க” என்று தன் பங்கிற்கு வாய்க்கு வந்தபடி பேச, திருநீலகண்டனுக்கும் சித்ராவுக்கும் அவமானமாக இருந்தது.
“அப்படியெல்லாம் இல்லீங்க. அவ இப்படி பண்ணுவான்னு நாங்க கனவுல கூட நினைச்சிப் பார்க்கல” என்று சித்ரா கண்ணீரில் கரைந்து கொண்டே கூற, புவியரசனின் முகமோ மணப்பெண் ஓடிப் போனதை நினைத்து அவமானத்தில் சிவந்துப் போனது.
நள்ளிரவு 1 மணிக்கு திருமண மண்டபமே நிசப்தமாக இருக்க, வசுமதி மெதுவாக அறையின் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அறை வாசலில் காவலுக்கு இருந்தவன் அமர்ந்திருந்தபடியே நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருக்க, சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள்.
யாரும் விழித்து இருக்கவில்லை. ஆண்கள் பலரும் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியவள் ஏற்கனவே எழுதி வைத்து இருந்த கடிதத்தை எடுத்து கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜையில் சிறிய டம்ளர் ஒன்றின் கீழ் வைத்தாள்.
அத்துடன், மறைத்து வைத்து இருந்த துணி பையைக் கையில் எடுத்துக் கொண்டவள் மெல்ல அறையில் இருந்து வெளியேறினாள். யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே பதுங்கியபடி அவள் தரையில் கால் பதியாதவாறு நடக்க, “அக்கா..” என்று ஒரு குரல் அவள் பின்னால் இருந்து கேட்டது.
அந்தக் குரல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த வசுமதி, விழி விரித்தவாறு விலுக்கென திரும்பிப் பார்க்க, “அக்கா.. நீ இந்த நேரத்துல எங்க போயிட்டு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அவள் முன்பு வந்து நின்றாள் மதுமதி.
வசுமதி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க, “என்ன கையில பேக் எல்லாம் வச்சி இருக்க?” என்று வினவியவளின் கடைசி வார்த்தைகள் அக்காவின் முகத்தில் தெரியும் பதட்டத்தையும் தடுமாற்றத்தையும் கண்டு தேய்ந்து போய் ஒலித்தது.
“ஓடிப் போகப் போறீயாக்கா?” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க,
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்ட வசுமதி “ஆமா” என்று விட்டு விடுவிடுவென திரும்பி நடந்தாள்.
“அக்கா நில்லுக்கா..” என்றவள் அவள் பின்னாடியே போக,
“என் பின்னாடியே வராதே மதி.. தயவுசெய்து என்னை போக விடு” என்றவள் நிற்கவே இல்லை.
“ஏய்.. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னா, அதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானே..”
“என் ஆத்திரத்தைக் கிளப்பாதே மதி.. என் சம்மதத்தைக் கேட்டா இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணாங்க.. நீயும் கூட இருந்த தானே.. ஒருத்தராவது என் விருப்பத்தைக் கேட்டாங்களா?” வசுமதி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்ள,
“ஏய் லூசு அக்கா.. அதெல்லாம் இப்போ தான் வந்து பேசுவீயா?” என்று இடுப்பில் கை வைத்து கொண்டு ஒரு உக்கிரமான முறைப்புடன் கூறினாள் மதுமதி.
அதில் அதிர்ந்து போய் நின்றவள் தங்கையைத் திரும்பிப் பார்க்க, “என்ன அப்படி பார்க்குற? வா என் கூட..” என்ற மதுமதி அக்காவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு மண்டபத்தின் பின்பக்கமாகச் சென்றாள்.
“கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா, பேசி முடிச்ச அன்னைக்கே ஓடிப் போய் இருக்கனும்.. இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்த நீ?” என்று போகிற போக்கில் கேட்க,
“எப்படி போறதாம்? தாத்தா தான் வீட்டைச் சுத்தி ஆளைப் போட்டு வச்சி இருந்தாரே.. என் ஃபோனை கூட பிடுங்கி வச்சிக்கிட்டார் தெரியுமா” என விசும்பிக் கொண்டே கூறினாள் வசுமதி.
அதைக் கேட்டு சட்டென நின்று விட்ட மதுமதி, “என்ன சொல்ற நீ? தாத்தாவா?” என்று கேட்க,
“ம்..” என்று தலை அசைத்தாள்.
“எதுக்கு?”
“நான் லவ் பண்ற விஷயம் அவருக்கு எப்படியோ தெரிஞ்சிப் போச்சுன்னு நெனைக்கிறேன்” என்று சொல்ல,
“என்னது? நீ லவ் பண்றீயா?” என்று அதிர்ச்சியில் உறைந்தாள் மதுமதி.
அப்போது அந்தப் பக்கமாக யாரோ நடந்து வருவது போல் சத்தம் கேட்க, தங்கையை இழுத்துக் கொண்டு இருளான இடத்தில் மறைவாக நின்றாள் வசுமதி. மதுமதி எதையோ கேட்க வாயைத் திறந்த கணம், எட்டி தங்கையை வாயை மூடியவள், “தயவுசெய்து பேசாதேடி..” என்றாள் கெஞ்சலாக.
நடந்து வந்தவன் வேறு பக்கமாகச் சென்று விட, திரும்பி தங்கையைப் பார்த்த வசுமதி “நான் போறேன்டி..” என்றாள் கண்களில் கண்ணீர் தேங்க.
அப்போது தான் இருவரும் பின்பக்க வாசலுக்கு அருகில் இருப்பதை உணர்ந்த மதுமதி, “அப்போ நீ திரும்பி வர மாட்டீயா?” என்று கேட்க,
கண்ணீருடன் தங்கையை அணைத்து விடுவித்தவள் “என்னை நெனைச்சி நீ கவலைப்படாதே மதி. நான் அங்க போயிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.
மதுமதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. வெகுநேரம் அங்கேயே நின்று இருந்தவள், யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு வந்து விட்டாள்.
தூங்காமல் நடந்ததையே அசைப் போட்டுக் கொண்டிருந்தவள், “அக்கா போனதுல என்ன தப்பு? எல்லாம் இந்த தாத்தாவை சொல்லனும்? நாளுக்கு நாள் அவரோட அராஜகம் அதிகமாகிட்டே போகுது. அக்காவுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கார். விடியட்டும்.. விடிஞ்சதும் கல்யாணப் பொண்ணு எங்கன்னு இந்த தாத்தாவைப் பிடிச்சிக்கிட்டு எல்லாரும் கேட்பாங்கல்ல.. அப்போ என்ன பதில் சொல்றாருன்னு பார்க்கிறேன்..” என்று மனதிற்குள் கருவியபடி படுக்கையில் விழுந்து கண் மூடினாள்.
பொழுதும் விடிந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக தயாராகிக் கொண்டு அங்கும் இங்குமாக பரபரப்பாக இயங்க, அந்தச் சத்தத்தில் கண் விழித்த மதுமதி, குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள்.
“ஹும்.. நடக்காத கல்யாணத்துக்கு 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடி ஆகனுமா?” என்று புலம்பிக் கொண்டே தயாரானவள், வெகு சாதாரணமாக அறையில் இருந்து வெளியேறி மண்டப ஹாலுக்குச் சென்று அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
மாப்பிள்ளையான புவியரசன் வெண்ணிற சட்டையும் அதே நிறத்தில் பேண்ட்டும் அணிந்து வந்து மணமேடை ஏறினான். ஐயர் சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அவனிடம் முகூர்த்த ஆடையை ஒரு தட்டில் வைத்து வழங்க, அதை வாங்கிக் கொண்டவன் அவனது அறைக்குச் சென்றான்.
“அடுத்துப் பொண்ணை வரச் சொல்லுங்கோ..” என்று ஐயர் குரல் கொடுக்கவும்,
“அக்கா.. டீ எடுத்துக்கோங்க..” என்று ஒருவன் மதுமதியிடம் வந்து நின்று தேநீர் கொடுக்கவும் நேரம் சரியாக இருந்தது.
“ஹான் அக்கா.. எல்லாமே ரெடி..” என்றவன் அடுத்த ஆளை கவனிக்கப் போய் விட, அவள் எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.
அங்கே வரிசையாக வாழையிலை வைத்துக் கொண்டிருந்த வேலையாள், “வாங்க மேடம்.. உட்காருங்க” என்று சொல்ல, மதுமதி நாற்காலியில் அமர்ந்தாள்.
கல்யாணப் பெண்ணை காணாமல் திருமண மண்டபமே கலவர பூமி ஆகும் போது வயிற்றுக்கு சாப்பிட எதுவும் கிடைக்காது அல்லவா??
அதனால் தான் முன்ஜாக்கிரதை உணர்வுடன் முதல் ஆளாய் காலை உணவு சாப்பிட அமர்ந்து விட்டாள்.
**********
அங்கே மணப்பெண்ணைக் காணாததால் மணமகள் அறையை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள்.
வசுமதி ஓடிப் போன விஷயம் அறிந்து ரங்கநாயகி சித்ராவையும் திருநீலகண்டனையும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்க, “போதும் நிறுத்து..” என்று மனைவியை அதட்டினார் சிவப்பிரகாசம்.
“க்கும்..” என்று நொடித்துக் கொண்ட ரங்கநாயகி தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ள,
தன் அண்ணனைப் பார்த்தவர் “இப்போ என்னண்ணா பண்றது?” என்று தவிப்புடன் கேட்டார்.
அவமானத்தில் இறுகிய முகத்துடன் ஜன்னல் கம்பியை இறுகப் பற்றியபடி நின்று இருந்த புவியரசனைப் பார்த்த ஞானப்பிரகாசம், சக்கர நாற்காலியை இயக்கிக் கொண்டு அவனிடம் சென்றார்.
“புவி..” என்று அழைக்க, அவன் வெறித்தப் பார்வையுடன் திரும்பிப் பார்த்தான்.
வாயைத் திறந்து அவன் ஒரு வார்த்தை பேசவில்லை என்றாலும், உள்ளுக்குள் இருக்கும் அவனது மன வலியையும் வேதனையையும் அந்த ஒற்றைப் பார்வையிலேயே உணர்ந்து கொண்டவர், “என்னை மன்னிச்சிடுப்பா..” என்றார் உடைந்த குரலில்.
“என்ன பெரியப்பா இது.. நீங்க போய் எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு..” என்றவன் அவரது கையைப் பற்றி கீழே இறக்க, அவர் உடைந்துப் போய் கண்ணீர் விட்டார்.
“எல்லாம் என்னால தானே.. நான் நல்லா விசாரிச்சி இருக்கனும்டா..” என்று அவர் தன் மேலேயே மொத்த பழியையும் போட்டுக் கொள்ள,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. வாங்க பெரியப்பா வீட்டுக்குப் போலாம்..” என்றவன் அவரது சக்கர நாற்காலியைப் பற்றிக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற எத்தனித்தான்.
“அப்படியே எப்படி போறது?” என்று ரங்கநாயகி கேட்க, புருவம் சுருக்கிய புவியரசன் நின்று கேள்வியாகத் தாயைத் திரும்பிப் பார்த்தான்.
“மண்டபம் வரைக்கும் வந்துட்டு கல்யாணம் நடக்காம திரும்புனா, வீட்டுக்கு ஆகாது” என்று அவர் சொல்ல,
சாகரன் இடையில் புகுந்து “அம்மா.. என்ன பேசுற நீ..” என்று கேட்டான்.
“டேய்.. வீட்டுக்கு ஆகாதுன்னா ஆகாது தான். இன்னைக்கு பெரியவனுக்கு கல்யாணம் நடந்தே ஆகனும். கல்யாணம் நடக்காம வீட்டுக்குப் போகக் கூடாது” என்று ஒரே போடாகப் போட,
“பொண்ணு தான் ஓடிப் போயிடுச்சேம்மா.. இனி எங்கிருந்து கல்யாணம் நடக்கும்?” என்று கடுப்புடன் பல்லைக் கடித்தான் ஆதவன்.
“அவ போனா என்ன.. அதான் என் அண்ணன் பொண்ணு இருக்கா இல்ல, அவ கழுத்துல உன் அண்ணனை தாலி கட்டச் சொல்லு” என்று ரங்கநாயகி சொல்ல, ஆத்திரத்தில் சிவப்பேறிய விழிகளால் தாயை உறுத்து விழித்தான் புவியரசன்.
“என்னை முறைச்சி ஒரு பலனும் இல்ல. பார்க்கும் போதே நல்ல இடமா பார்த்து இருக்கனும். பணம் இருக்குன்னு குணம் கெட்ட குடும்பத்துல போய் சம்பந்தம் பண்ணா, இப்படி தான் அவமானப்பட்டு நிக்கனும்..” என்று நேரம் பார்த்து குத்திக் காட்ட, திருநீலகண்டன் இடிந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
சித்ராவுக்கு அவரது வார்த்தைகளைக் காது கொடுத்து கேட்க முடியவில்லை. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியமும் இல்லை. அவமானத்தில் கூனிக் குருகிப் போய் தந்தையின் அருகில் நின்று இருந்தார்.
“குத்திக் காட்டுற நேரமா இது?” சிவப்பிரகாசம் மனைவியை முறைத்துப் பார்த்து கூற,
“இப்போ விட்டுட்டா.. இதே மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காதுங்க. இப்போவாவது குடும்பம் எப்பேர்ப்பட்டதா இருந்தாலும் குணம் தான் முக்கியம்ன்னு உங்க மகனுக்குப் புரிஞ்சா சரி..” என்றவரின் பேச்சு கணவனிடம் இருந்தாலும் பார்வை மூத்த மகனையே நக்கலாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
புவியரசன் தாயை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் மதுமதி அங்கு வந்தாள்.
“அடடடா.. மெதுவடை.. மெதுவடை தான்..” என்று ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே அவள் அறைக்குள் நுழைய, எல்லோரின் பார்வையையும் அவள் மீது விழுந்தன.
இளஞ்சிவப்பு நிற லெஹாங்கா உடை அணிந்து இருந்தவள் அறையில் கூடி இருந்தவர்களை வரிசையாய் ஒரு பார்வைப் பார்த்து, “எதுக்கு எல்லாரும் என் அக்கா ரூம்ல கூடி இருக்கீங்க?” என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க, யாரும் பதில் சொல்லவில்லை.
இடிந்து போய் அமர்ந்து இருந்த தாத்தாவைக் கண்டு அலட்சியமாக உதட்டை வளைத்தவளால் தாயின் அழுகையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கையில் இருந்த வடையை கீழே போட்டு விட்டு இரண்டே எட்டில் அன்னையிடம் சென்றவள், “அம்மா.. என்னாச்சும்மா? ஏன் அழுற?” என்று பதற்றமாகக் கேட்க,
“ம்.. உங்க அக்கா ஓடிப் போயிட்டாளாம்..” என நக்கலாகச் சொன்னார் ரங்கநாயகி.
“என்னது.. ஓடி போயிட்டாளா..?” என போலியாக அதிர்ந்து விழி விரித்த மதுமதி, வேகமாக ஓடிச் சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள்.
எல்லோரும் அவளை ஒரு மாதிரியாக பார்க்க, அவள் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் அலமாரியில் கையை விட்டு “இங்க தானே இருந்துச்சு.. எங்க போச்சு?” என்று எதையோ தேடினாள்.
“அங்க என்னடி பார்க்குற?” என்று சித்ரா கேட்க,
“ம்.. அவ மட்டும் போனாளா? இல்ல, போற போக்குல என்னோட மாங்கா டிசைன் போட்ட செயினையும் தூக்கிட்டு போயிட்டாளான்னு பார்க்கிறேன்..” என்றவள் அதைத் தேடி எடுத்து முத்தமிட்டு அகம் மகிழ, மற்றவர்களோ வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டார்கள்.
புவியரசனின் பார்வை மட்டும் ஒரு வித கூர்மையுடன் மதுமதியின் மேல் பதிய, அதைப் பார்த்த வசந்தன் தன் அருகில் நின்று இருந்த ஆதவனின் தோளை இடித்தான்.
‘என்னடா?’ என்பது போல அவன் தம்பியைப் பார்த்து புருவத்தை உயர்த்த,
‘அங்க பாரு’ என்பது போல் புவியரசனை கண்களால் காட்டினான் வசந்தன்.
ஆதவனைத் தொடர்ந்து மற்றவர்களும் புவியரசனின் பார்வை போன திசையைக் கண்டு குழம்பி நிற்க, ரங்கநாயகிக்கு உள்ளுக்குள் திக் திக் என்று இருந்தது.