காலம் யாவும் நீதானே - டீசர்

Thulasi Raj

Moderator
Staff member

கதையின் தலைப்பு - காலம் யாவும் நீதானே

நாயகன் - சத்யேந்திரன்

நாயகி - சிந்துஜா

கதை விரைவில் வரும்..


டீசர் 1



சத்யேந்திரன்.. தமிழ் சினிமாவின் பிரபலமான முன்னணி கதாநாயகன். அவன் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் சற்று மிதப்புடன் சுற்றுகிறான்.

அன்று அவன் நடித்த திரைப்படம் பிரத்யோகமாக திரையிடப்பட இருந்தது. அதற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தவர்கள் எல்லாம் வந்து விட, அவர்களோடு படத்தில் வேலை செய்து இருந்தவர்களும் வந்து இருந்தார்கள்.

கதா நாயகனான சத்யேந்திரன், அவனது அண்ணனும் அந்தத் திரைப்படத்தின் இயக்குநருமான அமரேந்திரன், கதா நாயகி, இசை அமைப்பாளர் என அந்தப் படத்தின் முக்கிய அங்கத்தினர் முதல் வரிசையில் அமர்ந்து இருக்க, சத்யேந்திரனின் பார்வையோ பின்பக்கம் நோக்கியது.

சிந்துஜா பின்வரிசையில் தனது நண்பர்களுடன் புன்னகை தவழும் முகத்துடன் வந்து அமர்ந்தாள். அவள் அந்த திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிப்புரிந்து இருக்கிறாள். அது தான் அவளது முதல் திரைப்படமும் கூட. அதனால் உண்டான மகிழ்ச்சியும் பூரிப்பும் அவள் முகத்தில் பிரகாசமாக தெரிய, அதை ஒருவித குரூரத்துடன் பார்த்து உதட்டை வளைத்து சிரித்தான் சத்யேந்திரன்.

விளக்குகள் அணைக்கப்பட, திரையில் படம் ஒளிப்பரப்பானது. படத்தின் பெயர் வரவும் அனைவரும் ஆரவாரமாகக் கைத்தட்டினர். அடுத்து நாயகன் பெயர் வர, அதற்கு இன்னும் அதிகமாக கைத்தட்டல் வந்தது. சிந்துஜா மட்டும் அவனது பெயரைப் பார்த்து விட்டு கைத்தட்டுவதை நிறுத்தி விட, அவளையே நொடிக்கொரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த சத்யேந்திரனின் முகம் அதில் ஆத்திரத்தில் சிவந்துப் போனது.

“திமிர்டி உனக்கு” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவன், திரையை நோக்கினான்.

எல்லாருடைய பெயர்களும் முடிந்து உதவி இயக்குநர்கள் பெயர் பட்டியல் வர, அதில் சிந்துஜாவின் பெயரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் எல்லாம் இருந்தது. அதனைக் கண்டு சிந்துஜா திகைத்து விழிக்க, அவளது நண்பர்களோ, “ஹே சிந்து.. உன் பேரைக் காணோம்டி..” என்று பதறினார்கள்.

அவளின் திகைத்த விழிகளில் கண்ணீர் திரளுவதைத் திருப்தியுடன் கண்ட சத்யேந்திரன், அதன் பின்பு அவள் புறம் திரும்பவே இல்லை.

“என்னடி ஆச்சு.. ஏன் உன் பேர் மட்டும் போடல?” என்று அவளது தோழியான ஹேமா சிந்துவை உலுக்கிக் கேட்க, அதில் சுயநினைவை அடைந்தவள் ‘தெரியாது’ என்பது போல் தலை அசைத்தாள்.

“சரி.. இரு.. படம் முடிஞ்சதும் டைரக்டர்க்கிட்ட கேட்கலாம்” என்று அவளது நண்பர்கள் சொல்ல, சிந்து பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தாள். திரையை நோக்க மனமில்லாமல் அவள் எழுந்துச் சென்று விட, அவளது நண்பர்களும் அவள் பின்னாடியே எழுந்துச் சென்றார்கள்.

இடைவெளி இன்றி 2.30 மணிநேரம் முழு படமும் ஓடி முடிய, வெளியே வராண்டாவில் தவிப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் சிந்து. அவளது நண்பர்கள் கூறிய ஆறுதல் மொழி எல்லாம் அவளது காதிலே ஏறவில்லை.

படம் முடிந்தப் பின்பு ஒவ்வொருவராக வெளியேற, சிந்து வேகமாக அரங்கத்தினுள் நுழைந்தாள். “ஹே.. சிந்து.. எங்கடி போற?” என்றபடி அவளது நண்பர்களும் பின்தொடர, அவள் நேரே அமரேந்திரனிடம் சென்று நின்றாள்.

திரைப்படத்தைக் கண்டவர்கள் எல்லாம் அவனது திறமையைப் பாராட்டி அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க, “ஏன் சார் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டாள் சிந்து.

அவளைத் திரும்பிப் பார்த்த அமரேந்திரன், பதில் சொல்ல முடியாமல் அவள் மேல் இருந்த பார்வையை விலக்கிக் கொள்ள, “சொல்லுங்க சார், நான் என்ன தப்பு பண்ணேன்னு படத்துல இருந்து என் பேரைத் தூக்குனீங்க?” என்று அவள் கலங்கிய கண்களுடன் கேட்டாள்.

“அது.. அது.. எடிட்ல மிஸ் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்..” அமரேந்திரன் சமாளிக்க முயல,

“மிஸ் எல்லாம் ஆகல.. நான் தான் உன் பேரைப் போட வேண்டாம்னு சொன்னேன்” என்று அமர்த்தலாகக் கூறினான் சத்யேந்திரன்.

சிந்து அவனை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க, அவன் கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக அவளை நோக்கினான். திரும்பி அண்ணனைப் பார்த்து விட்டு தம்பியை நோக்கியவள், “ஏன்?” என்று கேட்க,

“ஏன்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்டவன் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

அவனது பார்வையில் இருந்த குரூரத்தை உணர்ந்தவள் வாயடைத்துப் போனாள். அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அங்கு நிற்கவும் இல்லை. விறுவிறுவென்று அங்கிருந்து நடந்துச் சென்றாள்.

அமரேந்திரனுக்கு வருத்தமாக இருக்க, “டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. பாவம்டா அவ..” என்ற சொல்ல, அண்ணனை முறைத்துப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் எழுந்துச் சென்று விட்டான்.

சத்யேந்திரனின் வார்த்தையை மீறி செயல்படும் துணிவு அவனது அண்ணனாக அமரேந்திரனுக்கே இல்லை என்னும் போது, மற்றவர்களுக்கு மட்டும் எப்படி வரும்?

மறுநாள் அவள் வேறு ஒரு படப்பிடிப்பில் பணியாற்றிக் கொண்டிருக்க, இயக்குநரின் காதில் ஒருவன் வந்து கிசுகிசுத்தான். அவரது பார்வை சிந்துவின் மேல் பதிய, அவளுக்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. கிசுகிசுத்தவன் விலகி நிற்க, அவர் அவளைப் பார்த்து வா என்பது போல் கைக்காட்டினார்.

அவரிடம் வந்தவள் “சார்..” என்க,

“உனக்கு இனிமே இங்க வேலை இல்ல.. போ..” என்றார் அவர்.

“ஏன் சார்?”

“சத்யாவைப் பகைச்சிட்டு எல்லாம் இங்க எவனும் படம் எடுக்க முடியாது.. நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணும்மா” என்று தடாலடியாகக் கூறியவர் அவரது வேலையைப் பார்க்க போய் விட, சிலையாகிப் போனாள் சிந்து.
 
Back
Top