மையல் கொண்டேனடி மைவிழியே - டீசர்

Thulasi Raj

Moderator
Staff member

டீசர் 1


மாலை நேரம் இளஞ்செவிலியர்கள் சிறு சிறு குழுக்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று தன் நண்பர்களுடன் கேலியுமாக கிண்டலுமாக பொழுதை கழிக்க, சரியாக 6.30 மணிக்கு வெள்ளை நிற கார் ஒன்று மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது.

“ஹே.. டாக்டர் வந்துட்டார்..” என்று ஒரு செவிலியர் கூற, மற்றவர்கள் எல்லாம் கலைந்து சென்று தங்களது வேலையைப் பார்த்தனர்.

தனக்கென உரிய இடத்தில் காரை நேர்த்தியாக நிறுத்தி விட்டு தோளில் ஒரு கருப்பு நிற பையை மாட்டிக் கொண்டு காரில் இருந்து இறங்கினான் ஹரிஷ்.

விறுவிறுவென படியில் ஏறியவன் மருத்துவமனைக்குள் நுழைய, வரவேற்பாளர் முதல் அவன் செல்லும் வழியில் நின்று இருந்த செவிலியர் வரை அனைவரும் அவனுக்கு மாலை வணக்கம் கூறினர். சின்னத் தலை அசைப்புடன் அதனை ஏற்றுக் கொண்டவன் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து பையை தன்னிடத்தில் வைத்தான்.

“டாக்டர்.. பேஷண்ட் பைல்” என்று ஒரு செவிலியர் அவனது அறைக்குள் வர,

“வார்டுல ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்” என்று விட்டு மாடிப்படியில் ஏறிச் சென்றான்.

பத்து நிமிடத்தில் கீழ் இறங்கி வந்தவன், ஒவ்வொரு நோயாளியாக பார்க்க தொடங்கினான். இன்முகத்துடன் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் சொன்னவன், அவர்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்பினான்.

இடையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அழைத்து வர, அவரைப் பரிசோதித்தவன் அங்கு ஓரமாக நின்றிருந்த தென்றலை பார்த்து ஒரு ஊசியைப் போடச் சொல்லி விட்டு அவரது தலையில் அடிப்பட்ட காயத்தை ஆராய்ந்தான்.

அவளுக்கோ அடிப்பட்டவரின் காயத்தையும் இரத்தத்தையும் பார்க்கவே சகிக்கவில்லை. அதனால் தான் ஓரமாக நின்று இருந்தாள். அவள் நின்ற இடத்தில் மருந்துகள் வைக்கப்பட்டு இருக்க, அவனும் அவளுக்கு ஊசி எடுத்து போடும்படி கட்டளை இட்டு விட்டான்.

“என்ன பார்த்துட்டு நிக்குற.. ஊசி போடு..” என்று அவன் சொல்ல, அவள் நடுங்கும் கையால் ஊசியை பிடித்தாள்.

அதைப் பார்த்தவன் இரு கையையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவள் ஊசி போடும் அழகை குறுகுறுவென பார்த்தான். அவனது பார்வையில் அவளுக்கு இன்னுமே கை நடுங்க, “ஏய்.. என்னடி உன் கை இப்படி நடுங்குது..” என்று அவளுக்கு அருகில் இருந்த தேவிகா குனிந்து மெல்லிய குரலில் கேட்டாள்.

“எனக்கு தான் ஆக்சிடென்ட் பேஷண்ட்டை பார்த்தாலே மயக்கம் வரும்ன்னு உனக்கு தெரியாதா? இவர் வேற ஊசி போட சொல்லிட்டு என்னையவே குறுகுறுன்னு வேற பார்க்குறார்.. என்னால முடியலடி. கை வேற ரொம்ப நடுங்குது. ப்ளீஸ் எனக்கு பதிலா நீயே இந்த ஊசியை போட்டு விடேன்” என்று அவள் தன் மைவிழியைச் சுருக்கிக் கெஞ்சலாகக் கூற,

“சரி கொடு..” என்று விட்டு தேவிகா ஊசியை வாங்க,

“தென்றல்.. நான் உன்னை தான் ஊசி போட சொன்னேன்” என்றான் அழுத்தமாக.

அவளுக்கு பயத்தில் குரலே எழவில்லை. “இ..ல்ல டாக்டர்.. நான்.. எனக்கு..” அவள் வார்த்தைக்குத் தடுமாற,

“அவ காலையில் இருந்து எதுவும் சாப்பிடல டாக்டர்.. அதான் கை எல்லாம் நடுங்குதுன்னு என்னை ஊசியைப் போட சொன்னா” என அவளை முந்திக் கொண்டு பதில் சொன்னாள் தேவிகா.

இருவரையும் அழுத்தமாகப் பார்த்தவன், “தென்றல்.. கம் டு மை ரூம்” என்று விட்டு அவன் செல்ல, அவள் பயத்துடன் கையைப் பிசைந்துக் கொண்டு அவன் பின்னாடியே அறைக்குச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து கண்களில் கண்ணீருடன் வெளியே வந்தவள், அதன் பின்னர் அவன் இருக்கும் திசை பக்கமே செல்வதையே முடிந்த வரை தவிர்த்து கொண்டாள்.
 
Back
Top